வியாழன், 2 மார்ச், 2017

அன்பு

*இன்றைய நற்சிந்தனை*


*நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது*

இப்படிதான்...

ஒரு அபூர்வமான துறவியுடன்  ஒரு பெண் வந்து தன் கணவன் வெளியூர்  வேலைக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

துறவி கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று துறவியிடம் கொடுத்தாள். துறவி அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

துறவி கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''

துறவியின்  பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.

நாம் பிறருடன் அன்பாக இருக்க பழகுவோம்

*உலகத்தில் இருக்கும் குறைகளை      இறைவன் என்னிடம் எழுதச்சொன்னார்*..

*என்னால் எழுதி முடிக்கப்பட்டு தீர்ந்தது*
*குறைகள் அல்ல...என் எழுதுகோலின் மை*..


நண்பனா? எதிரியா?

நண்பனா? எதிரியா? முடிவு செய்
சிறு கதை

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.

வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.

வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான்.

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன்.

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.

பிரச்சனை தான் வேறு வேறு.

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

ஆடுகள் முக்கியம் தான்.

ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???

அனைவருக்கும் பகிருங்கள், சிந்திக்க வைக்கும் பயனுள்ள கதையாக இது இருந்தால்.

படித்ததில் ரசித்து.

புதன், 1 மார்ச், 2017

குப்பை வண்டி விதி’ தெரியுமா? - The Law of the Garbage Truck
( brandingkumar.com )

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.

அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.


ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.

எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.

வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி திமிராகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.

எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.

உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை.

விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

எலி தப்பித்து விட்டது.

நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.

ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.

"அன்று வாடிவாசலுக்காககக் குரல்  கொடுத்தோம் இன்று நெடுவாசலுக்காக குரல் கொடுப்போம்"