திங்கள், 5 டிசம்பர், 2022

ஒருவரை கணிப்பதை தள்ளி போடுங்கள்

 ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..


 அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....


தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...


பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..


தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...


உடனே அந்த சிறுமி, தாயிடம்

சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்...


நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..


அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.


அடுத்தவருக்கு போதுமான அளவு

இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.


நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.


எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..


மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.


"  Be Positive Always"


#அன்புசூழ்_உலகு

வெள்ளி, 11 நவம்பர், 2022

ஆசிரியரின் கருத்துகளை நேசி ஆசிரியரை அல்ல


புத்தர் மேல் மிக பாசம் வைத்திருந்த சீடர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் வைகாலி.


திடீரென ஒரு நாள் புத்தர் அவரை பார்க்க மறுத்துவிட்டார். ஏன் என வைகாலிக்கு புரியவில்லை. அதன்பின் பல ஆண்டுகள் ஒரு மலை மேல் இருந்து புத்தரை பார்த்து வந்தார்.


புத்தருக்கு உடம்பு சரியில்லாமல் உயிர் போகும் தருணம். வைகாலிக்கும் அப்போது வயது முதிர்ந்திருந்தது. பல ஆண்டுகள் கழித்து புத்தரை பார்க்க வைகாலி போனார். மரணபடுக்கையில் இருந்த புத்தரின் கைகளை பிடித்தார்.


"நான் என்ன தவறு செய்தேன்" என கண்ணீர் மல்க கேட்டார் வைகாலி.


"வைகாலி....நான் உன் ஆசிரியன். ஆனால் என் உடல் உன் ஆசிரியன் அல்ல. நான் உனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் மட்டுமே உன் ஆசான். தனிப்பட்ட மனிதனான என்னை நேசிக்காதே. நான் கற்றுத்தந்த பாடங்கள் தான் உன் ஆசான் என நினைத்தால், எனக்கு அதன்பின் அழிவே இருக்காது. இந்த உடல் தான் நான் என நினைத்தால் இன்னும் சில மணிநேரங்களில் உன்னை விட்டு நான் பிரிந்துவிடுவேன்" என்றார் புத்தர்.


ஆசிரியரை தெய்வமாக்காமல் அவரது கருத்துக்களை மட்டும் உள்வாங்கினால் அதன்பின் ஆசிரியர் நம்மை விட்டு எங்கேயும் போகப்போவது இல்லை, நம் மனதில் உருவாக்கும் சிந்தனைகள் மூலம் சிரஞ்சீவியாக வாழ்வார்.

புதன், 2 நவம்பர், 2022

புத்திசாலி சிறுவன்

 அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது.


அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம்

இல்லை. யானையை அளக்கும் அளவுக்குப்

பெரிய தராசும் கிடையாது.


யானையின் எடையை எப்படி அறிவது?

என்று அமைச்சர்களிடம் கேட்டார் மமன்னர்


யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை.


அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்'என்றான். 


அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.


ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.


அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான்.


அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான்.


யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான்.


பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான்.


முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும்வரை கற்கள் ஏற்றப்பட்டன.


பின்பு அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, "அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை" என்றான். 


அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.


எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். 


ஆகவே, அவர்களால் அதன் எடையைக்கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. 


ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்;


எளிதில் விடை கண்டான்.


எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச்சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும்.


பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். 


அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.


#படித்ததில்_பிடித்தது

வெள்ளி, 28 அக்டோபர், 2022

கர்வம் கூடாது

 ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப்

புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன்

நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது.

நரிக்கு ஏக குஷி…


“நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய

எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு

யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்

படியாகும்!’ என்று ஊளையிட்டது.


கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்

படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை

என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது.

தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை.


மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின்

நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது.”ஆஹா… பசியால்

நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்…’ சிறுத்து விட்டோம்

என்று வருந்தியது நரி.


இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ,

கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம்,

பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல்

நரிக்குப் பின்பாக விழுந்தது… அதனால், நரிக்குத் தன் நிழலே

தெரிய வில்லை…”ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம்.

நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது… ஒரு வேளை இறந்து

போய் விட்டோமோ?’ என்று பயந்தது.


பிறகு, “சீச்சி… நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு

ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்..”‘

என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.


இந்த நரியின் கற்பனை மாதிரி தான்… சிலர் தங்களை வெகு

பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ

தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு

அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி

வாடுகின்றனர்.


காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்; மாலை

நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம்,

ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம், வாழ்வைக் கொண்டாடுவோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே..

புதன், 26 அக்டோபர், 2022

கூச்ச சுபாவம்

 ……………………………………………..


*' கூச்ச சுபாவம்..''*

.....................................


நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டை அடிப்பவர்களில் பலர் நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய் விடுவார்கள். காரணம் கூச்சம்.


அதுவும் மேடைகளில் ஏறிப் பேச வேண்டும் எனில் அவ்வளவு தான் வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கொட்டுபவர்கள் தான் அனேகம்...


வேலைக்கான நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் இந்தக் கூச்சத்தினால் தொடர் தோல்விகளையே சிலர் சந்திக்கின்றனர்.


இந்தக் கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்குச் சென்றிருப்பேனே என்று பலர் புலம்புவதைக் கேட்டு இருப்போம்..


சின்னத் தயக்கம், நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்து விடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம்.


கூச்ச இயல்பு உள்ளவர் தம் குறைகளையே பெரிதுபடுத்திக் கொள்கிறார் என்று சொல்கிறார்கள். குறைகளை உணர்ந்து கொள்ள வேண்டியது தான். 


ஆனால் அந்தக் குறைகள் என்னென்ன, பயமா, கவலையா, எத்தகையப் பயம் என்பதை அலசி, ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, அந்தக் குறைகள் இருக்கின்றனவே என்று நினைத்து ஒதுங்கி நிற்பதில் பயன் ஏதும் இல்லை.


தன்னால் மற்றவர்களைப் போல இயல்பாகவும், இயற்கையாகவும் பேச முடியும் என்ற நம்பிக்கை மிகத் தேவை. 


இந்த நம்பிக்கை வாய்ப்புகளை எதிர்நோக்க உதவும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் போது வெற்றி தானாக வருகிறது. வசதிகளை எப்படிப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவது என்பதில் அக்கறை கொள்ள வேண்டும்.


திருப்புமுனையாக ஏதாவது நிகழ்ந்து தான் கூச்ச இயல்பு மறைய வேண்டும் என்று காத்து இருக்கக் கூடாது.


பேச்சுத் திறமையோ, வாதத்திறமையோ அவசியம் இருந்து தான் ஆக வேண்டும் என்பது இல்லை. 


கலந்துரையாடலில் இயல்பாகச் சேர்ந்து கொண்டு, பேசக் கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திப் பேச வேண்டும். 


தன்னாலும் தனிப்பட்ட ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்பி உரையாட வேண்டும். 


சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை’ என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டு பிடித்தவர்களின் அனுபவங்கள் இவை.


திக்குவாய் என்பதால் கூச்ச சுபாவம் உடையவனாக இருந்தான் அவன். ஆனால், அது அவனை எந்த விதத்திலும் அமெரிக்க ஜனாதிபதியாகவோ, புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரை நிகழ்த்துவதையோ தடுக்கவில்லை. கூச்ச சுபாவத்தை மீறி வந்ததால் தான் ஒரு ஆப்ரகாம் லிங்கன் உதித்தார்!


ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம். ஆனால், அவள் புகழ்பெற்ற மர்ம நாவல்கள் எழுதி அகதா கிறிஸ்டியாக வளர்வதை அந்தக் கூச்சத்தால் தடை செய்ய முடியவில்லை!


ஆள் கோமாளி மாதிரி இருந்தான். அவனுடைய குரல் மோசமாக இருந்தது. இவை இரண்டும் அவனுக்கு கூச்ச உணர்வைக் கொடுத்தது. அந்தக் கூச்சத்தை தகர்த்து எறிந்து அவன் கண்டு பிடித்த சினிமா தான் இன்று உலகின் நம்பர் ஒன் பொழுது போக்கு. அவர் தாமஸ் ஆல்வா எடிசன்!


இன்னும் பட்டியல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் விரும்பும் மாற்றமாக நீங்களே மாறாத வரையில் இவைகள் வெறும் வார்த்தைகள் தான்!


ஆம்., நண்பர்களே..,


ஒன்றே ஒன்று தான்.. கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. 


கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவர்களால் தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்..!     


(ஆக்கம் உடுமலை சு.தண்டபானி........)💐💐💐💐💐💐

கூச்சம் தவிர்

 கூச்சம் தவிர்!

http://www.puthiyathalaimurai.com/this-week/3186

‘பரதேசி’ படத்தின் கேமராமேன் என்றதுமே எல்லாருக்கும் உடனே பளிச்சென்று தெரியும். ஆனால்,  செழியன் ஒரு சகலகலா வல்லவர். உலக சினிமா குறித்து அவர் எழுதிய புத்தகங்கள் சினிமா ஆர்வலர்களிடையே வெகுபிரசித்தம். ‘ஹார்மோனியம்’ என்கிற அவரது சிறுகதை, தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. இந்தக் கதைக்காக, ‘கதா’ விருது பெற்றவர் செழியன்.


இந்திய கலாச்சார அமைச்சகத்தின் நிதியுதவி பெற்று, தமிழ் சிறுகதைகள் வெளிப்படுத்தும்  மனச்சித்திரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டவர். டாக்டர். அப்துல் கலாம் குறித்து, ‘ஒரு சிறிய கனவு’ என்று ஆவணப்படம் எடுத்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த இவரது ஆவணப்படமும் புகழ்பெற்றது.


சினிமா, எழுத்து மட்டுமின்றி இசைத்துறையிலும் தடம் பதித்திருக்கிறார். ஓர் இசைப்பள்ளி நடத்துகிறார். மேற்கத்திய இசை குறித்த அறிமுகத்தைத் தரும் பத்து பாகங்கள் கொண்ட தொடர்நூலை தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.


பல்துறை வித்தகரான செழியன், தன்னுடைய வாழ்க்கைப் பயண அனுபவங்கள் சிலவற்றையும் அவற்றின் மூலம் கிடைத்த படிப்பினைகளையும், ‘புதிய தலைமுறை’ வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்


அப்போது முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் தினத்திற்காக நான் படித்த நாட்டரசன் கோட்டை விசாலாட்சி வித்யாசாலா தொடக்கப் பள்ளியில் ஓர் ஓவியப்போட்டி நடந்தது. போட்டியில் நேருவின் படத்தை வரைய வேண்டும்.


எனது அப்பாவும் அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியர்கள். அப்பா ஓவியப் பயிற்சி பெற்றவர். இரண்டு நாட்களுக்கு முன்பே ஒரு காகிதத்தில் நேருவின் பக்கவாட்டு முகத்தை கோட்டோவியமாக வரைந்து கொடுத்தார். அதைப் பார்த்து பழகச் சொன்னார்.


சரிவான தொப்பி. அதிலிருந்து நேர்கோடாக நெற்றி. நீளமான மூக்கு. இதுவரை வரைவது எனக்கு எளிதாக இருந்தது. மூக்குக்குக் கீழே வாயையும், நாடியையும் வரைவதில் ஒரு கோணல் இருந்து கொண்டே இருந்தது. நாடியின் நீளம் கொஞ்சம் கூடினாலும் அது நேருவாக இல்லை.


அதுவரை தேர்வுகளிலும் போட்டிகளிலும் முதல் பரிசு தவிர வேறு பரிசுகள் வாங்கியதே இல்லை என்பதால், ஓவியப் போட்டியிலும் நானே முதல் பரிசு என்று நினைத்துக்கொண்டு வரைந்தேன். முடிவுகள் வந்தன. நான் இரண்டாம் பரிசு. முதல்முறையாக முதலிடம் இழந்ததை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.


பள்ளி முடிந்து வந்து வீட்டுக்குள் போகாமல், வெளியில் நின்று சுவரை நகத்தால் கீறிக்கொண்டு இருந்தேன். அம்மா அருகே வந்தார். நான் இரண்டாம் பரிசு வாங்கியதில் அம்மாவுக்கும் வருத்தம்தான்.


‘ஒரு தடவை வரைஞ்சா வந்திருமா?’ என்றார்.


அமைதியாக இருந்தேன்.


‘நீ வரைஞ்சு வரைஞ்சு நல்லா பழகியிருக்கணும்... தப்பு உம்மேலதான்...’


‘நான் இப்ப திரும்ப வரையுறேன்...’


‘இனி அடுத்த வருஷம்தான்...’ சொல்லிவிட்டு அம்மா வேகமாக உள்ளே போய்விட்டார்.


எனக்கு அழுகையாக வந்தது. அம்மா எனக்கு ஆறுதல் சொல்வார் என எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. நடந்ததை மாற்ற முடியாது என்கிற உண்மையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மேலும் அந்தப் போட்டிக்கு அப்பாதான் நடுவர் என்பதும் என் ஏமாற்றத்துக்கு கூடுதல் காரணம்.


அன்று இரவு வரை யாரிடமும் பேசவில்லை. பிறகு அம்மாவே ஆறுதலாகப் பேசினார்.


‘செழி... உனக்குத் தெரியலைன்னா பரவாயில்ல. தெரிஞ்ச படத்தை ஒழுங்கா வரைய வேணாமா? செய்யறதைத் திருந்தச் செய்யணும்ப்பா..."


திருந்தச் செய்யணும் என்பதன் அர்த்தம் முதல்முறையாக எனக்குப் புரிந்தது.


எங்கள் பள்ளி ஓட்டுக் கட்டிடம் என்பதால்,  நீளமான வகுப்பறைகளின் மேல் வரிசையாக பனைமர உத்தரங்கள் இருக்கும். அதில் கலர் சாக்பீஸால் மேற்கோள்கள் எழுதி இருப்பார்கள். ‘அறம் செய்ய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ ‘இயல்வது கரவேல்’ என்று வரிசையாக உத்தரத்தின் இரண்டு பக்கமும் எழுதி இருக்கும். பெரும்பாலும் அப்பாதான் இதை எழுதுவார். அந்த உத்தரத்தில், ‘செய்வன திருந்தச் செய்’ என்றும் எழுதி இருந்ததைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.

 

ஆனால், அதன் அர்த்தம் வெற்றிவாய்ப்பை இழந்தபோதுதான் பளிச்சென்று புரிந்தது.


இப்போதும் நான் செய்கிற எந்த வேலை, அதற்குரிய விளைவைத் தராமல் போகும்போது அம்மா சொன்ன இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும்.


1. தப்பு உம்மேலதான்

2. செய்யறதை திருந்தச் செய்

 

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அப்பாதான் என் வகுப்பு ஆசிரியர். வீட்டிலிருந்து பள்ளி வரை அப்பாவும் நானும்தான் பேசிக்கொண்டே நடந்து வருவோம்.வெளியில் இருக்கும்வரை அவர்  அப்பா. பள்ளிக்குள் நுழைந்துவிட்டால் சார். மிகவும் கண்டிப்பான ஆசிரியர். மூணாப்பு சார் என்றால் எல்லோருக்கும் பயம்.


வகுப்பு நேரம் முடிந்து, மாலையில் விளையாட்டு வகுப்பு நடக்கும். பள்ளிக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் சக மாணவர்கள் கபடி விளையாடும்போது நானும் அதில் கலந்துகொள்வேன். ஆனால், ஒருமுறை கூட பாடிப்போக மாட்டேன். பாடிப்போவது என்பது கபடி கபடி என்று பாடிக்கொண்டே எதிர் அணியில் இருப்பவர்ளை தொட்டு, அவுட் ஆக்க வேண்டும். இவ்வாறு பாடிப்போகும்போது எதிரணிக்காரர்கள் நம்மைப் பிடித்து அமுக்கி அவுட் செய்யும்  அபாயம் இருப்பதால், அதற்குப் பயந்துகொண்டே பாடிப்போக மாட்டேன். மூணாப்பு சார் மகன் என்பதால், என்னை யாரும் வற்புறுத்தவும் மாட்டார்கள்.


நாங்கள் விளையாடும்போது அப்பா ஓர் ஆசிரியராக நின்று பார்த்துக் கொண்டிருப்பார். ஒருநாள் நான் பாடிப்போகாமல் இருப்பதைக் கவனித்துவிட்டார். சில மாணவர்களை அழைத்துக் கேட்டார்.


‘ஆம் சார்...செழியன் எப்பவுமே பாடி வரமாட்டான் சார்!’


ஆட்டம் புதிதாகத் துவங்கியது.


‘நீதான் முதல்ல பாடிப் போகணும் போ..’ என்றார் அப்பா.


நான் தயங்கி நின்றேன். மாணவர்களுக்கு சிரிப்பு. எனக்கு வெட்கமாகவும் பயமாகவும் இருக்கிறது.


வேண்டாமே என்பது போல அப்பாவைப் பார்க்கிறேன். ஆனால், அவர் மூணாப்பு சாராக கோபத்துடன் நின்று, ‘போ...’ என்று கத்துகிறார். நான் போகாமல் நின்றுகொண்டு இருந்தேன். வேகமாக அருகில் வந்தவர், தலையில் ஓங்கிக் கொட்டினார்.


‘க...ப...டி... க...ப...டி...’ பாடிப்போனதுமே மாணவர்கள் சிரித்துக்கொண்டே என்னைப் பிடித்து அமுக்கி அவுட் ஆக்கிவிட்டார்கள். அவமானம் தாங்க முடியவில்லை. அழுகையும் கோபமும் பொங்குகிறது. அவுட் ஆகி, கோட்டுக்கு வெளியில் தலைகுனிந்து நிற்கிறேன். எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. அன்று மாலை வீட்டுக்கு அப்பாவுடன் வரவில்லை. தனியாகவே நடந்து வந்து விட்டேன்.


என்னதான் கோபம் என்றாலும் தூங்கும்போது அப்பா அருகில் படுத்துதான் தூங்க வேண்டும். அன்று அம்மா பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டேன். ‘நீ  அவர்கூட பேசாத...’ என்று அம்மா சொல்லும்போது, ‘செழி... இங்கிட்டு வா...’ தோளைப்பிடித்து அப்பா திருப்பினார். நான் திரும்பாமல் இருந்தேன். என் தலையைத் தடவிக் கொடுத்து, ‘வலிக்குதா?’ என்று கேட்டதும் அழுகை பொங்கிவிட்டது. நெருக்கமாக படுக்க வைத்துக் கொண்டார். தேம்பித் தேம்பி அழுது ஓய்ந்தேன்.


‘செழி... எதுக்குப்பா பயப்படுற... எல்லாரும் உன்னை மாதிரி சின்னப் பயலுகதானே...’


எங்கள் எஸ்.வி.வி. சாலா தொடக்கப்பள்ளிக்கு ஊரின் இன்னொரு தெருவில் ஒரு கிளை இருந்தது. மெயின், பிராஞ்ச் என்று இரண்டு பள்ளிகளையும் சொல்லுவோம். அம்மா பிரதானப் பள்ளியில். அப்பா கிளைப் பள்ளியில். அப்போது ஸ்கூல் லீடர் தேர்ந்தெடுக்கும் முறை வந்தது. ஒரு மாணவரை பிரதானப் பள்ளியில் இருந்தும் இன்னொருவரை கிளைப் பள்ளியில் இருந்தும் முன்மொழிவார்கள். இவ்வாறு மொழியப்பட்ட மாணவர்கள் இருவரும் ஒவ்வொரு வகுப்புக்கும் போய், முன்னால் நின்று என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று வாக்கு கேட்க வேண்டும். விரும்பியவர்கள் கை தூக்குவார்கள். அதில் யாருக்கு அதிகமாக கை தூக்கப்படுகிறதோ அவர்தான் மாணவர் தலைவர்.


கிளைப் பள்ளியில் இருந்து அப்பா என்னை முன்மொழிந்தார். எனது கூச்சத்தைப் போக்கும் ஏற்பாடுதான் இது.


‘மெயின் ஸ்கூலுக்குப் போ... போ, ஒவ்வொரு வகுப்பாகக் கேளு..."


நான் அம்மா இருக்கும் வகுப்புக்கு முதலில் போய் அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு முன்னால் நின்றேன். அதுவே ஒருமாதிரி கூச்சமாக இருந்தது. இன்னொரு வகுப்புக்குப் போனேன். மற்ற வகுப்புகள் போய் ஒன்றும் சொல்லாமல் நின்றேன். முடிவில் எனக்குப் போட்டியாக நின்றவர்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

நான் தோற்றுப்போனேன். அன்றும் தோல்வியை என்னால் தாங்க முடியவில்லை. அப்பாவிடம் வந்து எப்படிச் சொல்வது? அவரைப் பார்த்ததுமே அழுகை வந்துவிட்டது. வழக்கம்போலவே என் அழுகைக்கு அவர் ஆறுதல் சொல்லவில்லை. இது நடக்கும் என்பது அவருக்குத் தெரிந்தே இதைச் செய்தது போல இருந்தது.

அந்த சமயத்தில் இந்திரா காந்தியின் இருபது  அம்சத் திட்டம் வந்திருந்தது. அதற்காக பேச்சுப் போட்டிகள் நடந்தன. போட்டியில் என் பெயரை அப்பா கொடுத்தார். அவரே பேசுவதற்குப் பயிற்சியும் கொடுத்தார்.


‘கூட்டத்தைப் பார்த்து பயப்படக்கூடாது. அதற்குப் பழக வேண்டுமெனில், இதைப் பார்த்துப் பேசு"என்று கண்ணாடி முன்னால் நிறுத்தினார். அந்தப் பேச்சில் பாரதியார் பாடலும் இருந்தது.


’அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே’


அதை எப்படி உச்சரிக்க வேண்டும், எந்தச் சொல்லை அழுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார். அச்சம் என்பதுதான் பயம் என்று சொன்னார். இதை எழுதிய பாரதியைப் பற்றிச் சோன்னார். ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிற எம்ஜியார் பாடலையும் பாடிக்காட்டினார்.


பேச்சுப் போட்டி வந்தது. உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் நான் மிகவும் சிறுவனாக இருந்ததால், மேஜையின் மீது என்னை ஏற்றி நிற்க வைத்தார்கள். பள்ளியின் எதிரில் ஒரு குளம் இருக்கும். நல்ல வேளையாக மேஜையின் மீது ஏறி நின்றதும் எதிரில் இருந்த யார் முகமும் தெரியவில்லை. குளம்தான் தெரிந்தது. அந்தக் குளத்தைப் பார்த்து கைகளை  அசைத்துப் பேசி முடித்தேன். கைதட்டல்களும் பாராட்டுக்களும் குவிந்தன.

 

‘இதையே ஆல் இந்தியா ரேடியோவில் பேச முடியுமா?’ என்று தலைமை ஆசிரியர் கேட்டார். எனக்குப் பெருமிதமாக இருந்தது.


‘அப்பா! அன்னிக்கு லீடர்  தேர்ந்தெடுக்கும்போது யாருமே எனக்கு கை தூக்கல. இன்னிக்கு எல்லோரும் கை தட்டுறாங்களே...ஏன்?’


‘பயப்படாம நாம ஒரு விஷயத்தைச் செய்யும்போது அதை எல்லாரும் பாராட்டுவாங்க.’


‘பேசுறதுக்கு முதல்ல பயமாத்தான் இருந்துச்சு...அப்புறம் எப்படிப் போச்சு?’


‘தெனம் பயிற்சி எடுத்தீல்ல... அதுதான், பயிற்சி எடுத்தா எதையும் பழகீறலாம். முடியாததுன்னு எதுவும் இல்ல.செய்யறவரைக்கும்தான் பயம். செஞ்சேன்னு வெச்சுக்க... அது போயிரும்.’


மனதுக்குள் இன்னொரு கதவு திறந்தது.


சென்னைக்கு வந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். முதல் நாள் படப்பிடிப்பு ஒரு வீட்டில் நடந்தது. மதிய இடைவேளையின் போது பி.சி.சார் என்னை அழைத்தார்.


‘செழியன்...பர்ஸ்ட் ஃப்ளோருக்குப் போ ஒரு அஞ்சு பேர் நிக்கிற மாதிரி வைட் ஃப்ரேம் வெச்சுட்டு என்னைக் கூப்பிடுங்க’ என்றார்.


எனக்கு ஆச்சரியம். படப்பிடிப்பின் முதல் நாள். எங்கள் குழுவில் நான் கடைசி உதவியாளன். என்னை அழைத்து ஃப்ரேம் வைக்கச் சொல்கிறார் என்றதும் ஆர்வமாக முதல்தளத்துக்குப் போனேன். போன உடனே இது எனக்கு வைக்கப்படுகிற தேர்வு என்று புரிந்துவிட்டது. அது மிகச்சிறிய அறை. அந்த அறையில் கேமரா வைத்தால், எதிரில் இரண்டு பேருக்கு மேல் நிற்க முடியாது. இதில் வைட் பிரேம் எப்படி வைப்பது? வைக்க முடியல  சார் என்று சொல்வது எளிது. ஆனால், முதன் முதல் கொடுத்த ஒரு வாய்ப்பை முடியவில்லை என்று சொல்வது புத்திசாலித்தனம் ஆகுமா?


யோசித்துக்கொண்டே நின்றேன். அந்த அறையைச் சுற்றிலும் பார்த்தேன். பூட்டிய கதவு ஒன்று இருந்தது. அந்தக் கதவைத் திறக்க முடிந்தால், உள்ளே கேமராவை வைத்துவிடலாம். அந்த வீட்டு உரிமையாளரைப் பார்த்துக் கேட்டேன். அவர், ‘திறக்க முடியாது... அது பெர்சனல் அறை’ என்று மறுத்துவிட்டார். தயவுடன் வேண்டிக் கேட்டுக்கொண்டதும் கதவைத் திறக்க ஒப்புக் கொண்டார். கேமராவை உடனே உள்ளே வைத்து ஒரு வைட் பிரேம் வைத்துப் பார்த்தேன். சரியாக இருந்தது.வேகமாக வந்து பி.சி. சாரிடம் சொன்னேன். முதுகில் தட்டிக் கொடுத்தார்.


அவ்வளவுதான். அந்த ஷாட்டை அவர் எடுக்கவில்லை. ஆனால், அன்று நடந்தது எனக்கு ஒரு தேர்வு. அந்த நொடியிலிருந்து கேமரா மீது எனக்கு இருந்த பயம் போய்விட்டது. இந்தக் கருவியை நம்மால் கையாள முடியும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. ‘செய்யற வரைக்கும்தான் பயம், செஞ்சா அது போயிரும்...’ என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.


சிறுவயதில் மேஜையின் மீது என்னை ஏற்றி நிற்க வைத்ததுப் பேசு என்றதும் முதல் நாளே கேமராவைக் கையாள அனுமதித்ததும் ஒரே நோக்கத்தின் இரண்டு விதமான செயல்கள் என்பதைப் புரிந்து கொள்கிறேன். ஒன்றை அப்பா செய்தார். இன்னொன்றை ஆசிரியர் செய்தார்.


‘வருவதை எதிர்கொள்’ என்கிற கீதையின் மேற்கோள் எனக்கு மிகவும் பிடிக்கும். வருவதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதை திருந்தச் செய்யவேண்டும். வெற்றி என்பதும் தோல்வி என்பதும் ஒரு செயலை நாம் எப்படிச் செய்கிறோம் என்பதன் இரண்டு வெவ்வேறு விளைவுகள். அவ்வளவுதான்.


திரைப்பட வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன. வெற்றியாக இருந்தால், அதற்குப் பலர் காரணமாக இருக்கலாம். ஆனால், தோல்வியாக இருந்தால், ‘தப்பு உன்மேலதான்... செய்யறதை திருந்தச் செய்’என்கிற அம்மாவின் குரல்தான்  இப்போதும் எனக்குக் கேட்கிறது.


இதுபோல வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பூட்டிய கதவுகள் சுற்றிலும் இருக்கின்றன. கொஞ்சம் தேட வேண்டும். இப்போதும் என் வாழ்க்கையில் வெற்றியடைந்த தருணங்கள் எல்லாம் என்னால் முடியும் என்று துணிந்து செய்யும்போதுதான் கிடைத்திருக்கின்றன. தோல்விகள் வரும்போது அதற்கு நான்தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்கிறேன். செய்வதை முன்பைவிடத் திருந்தச் செய்கிறேன். வெற்றி வருகிறது.


வருவதை எதிர்கொள், கடமையைச்செய், பலனை எதிர்பாராதே...


சந்திப்பு : யுவகிருஷ்ணா

சனி, 22 அக்டோபர், 2022

உலகம் நம் தவறைத்தான் முதலில் கவனிக்கும்

 1×9=7

2×9=18

3×9=27

4×9=36

5×9=45

6×9=54

7×9=63

8×9=72

9×9=81

10×9=90


மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. காரணம் முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது. மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது. 


சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்..


நான் முதல் சமன்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன். இவ்வாறு எழுதியதற்கு ஒரு காரணமுண்டு. இதன் மூலம் உங்களுக்கொரு படிப்பினையைக் கற்றுத் தருவதே அதன் நோக்கம். 


இந்த உலகம் உங்களை எவ்வாறு மதிப்பிடுகின்றது என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள். 


நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக  எழுதியிருக்கின்றேன். அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்ட முன்வரவில்லை. ஆனால் நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விடயத்தைக் காரணங்காட்டி அனைவரும் சிரித்து கேலி செய்து விட்டீர்கள்.


நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும் இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருமித்து நின்று மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்.. 


இவைகளைக்கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,  உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.


💠💠💠💠💠💠💠💠

புதன், 19 அக்டோபர், 2022

நல்ல நண்பன்

 ஒரு நண்பராக இருப்பது எப்படி?


‘உன்னை அழைப்பதற்குச் சொர்க்கத்திலிருந்து வருகிறேன். அங்கே நீ விரும்பும் எல்லாமே இருக்கிறது. நீ கேட்கும் எதுவும் கிடைக்கும். உன் நண்பனைத் தவிர! வா சிசரோ’ என்று ஒரு தேவதை வந்து அழைத்தால், கையெடுத்து வணங்கிவிட்டுச் சொல்வேன். மாட்டேன். நீ வேண்டுமானால் அதைச் சொர்க்கம் என்று அழைக்கலாம். என் நண்பன் இல்லாத ஓரிடம் எப்படி எனக்குச் சொர்க்கமாகும்? அங்கே நான் ஏன் வரவேண்டும்?


‘உன்னை அழைப்பதற்கு நரகத்திலிருந்து வருகிறேன். அங்கே உலகின் அத்தனை பயங்கரங்களும் இருக்கின்றன. நீ தப்பவே முடியாது. உன் நண்பன் அட்டிகஸும் அங்கேதான் இருக்கிறான். வா என்னோடு’ என்று ஒரு பூதம் வந்து அழைத்தால், இதோ என்று கையோடு கிளம்பிவிடுவேன். என் அட்டிகஸ் இருக்கும் இடம் எப்படி நரகமாக இருக்க முடியும்? அங்கே எப்படிப் பயங்கரங்கள் இருக்கும்? ஒருவேளை நிஜமாகவே அது ஒரு கொடூரமான இடம் என்றால், என் நண்பனை அங்கே தவிக்க விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி இங்கே சுகமாக வாழ முடியும்?


பாவம், ரோமாபுரியின் தத்துவஞானி கொஞ்சம் உணர்வுவயப்படுகிறவர் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் சொல்வதில் கொஞ்சம்கூட மிகையே கிடையாது. நான், என் வீடு, என் குடும்பம் என்று சுருங்கிக் கிடந்த என்னைப் பிடித்து வெளியில் இழுத்து இதோ பார் என்று பரந்து விரிந்த உலகைக் காட்டியவன் அட்டிகஸ். கண்களோடுதான் பிறந்தேன். ஒளி அவன் கொடுத்தது. இதயத்தோடுதான் பிறந்தேன். துடிப்பு அவன் வழங்கியது. நட்பின் உண்மையான பொருள் என்ன, அது ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை அவனிடமிருந்தே கற்றேன்.


ஒரு நல்ல நண்பனால் உங்கள் இதயத்துக்குள் ஊடுருவிச் சென்று பார்க்க முடியும். உங்களுக்குள் நிறைந்திருக்கும் நல்லதையும் கெட்டதையும் கண்டுபிடித்து இது நல்லது, இது கெட்டது என்று தெளிவாகச் சுட்டிக்காட்ட முடியும். நல்லதை மேலும் மேலும் வளர்க்கவும் கெட்டதைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றவும் அவன் உங்களுக்கு உதவுவான். இவன் என் வாழ்க்கைக்குள் நுழைந்தான். அதன் பின் எல்லாமே மாறிவிட்டது என்று அவனைக் கைகாட்டி நீங்கள் பெருமிதம் கொள்ள முடியும்.


நான் என்னவெல்லாம் கேட்கவேண்டும் என்று விரும்புகிறேனோ அதை மட்டுமல்ல; எதையெல்லாம் கேட்க நான் தயாராக இல்லையோ அதையும் என் நண்பன் என்னிடம் பகிர்ந்துகொள்வான். இதைச் சொன்னால் நான் கோபப்படுவேனோ, அப்படிச் சொன்னால் நான் வருந்துவேனோ என்றெல்லாம் தயங்க மாட்டான்.


அட்டிகஸ் நீ என்னை அதிகம் புகழ்ந்ததில்லையே, ஏன்? என்னுடைய மாபெரும் சாதனைகளைக்கூட ஒரு புன்னகையால் கடந்து சென்றுவிடுகிறாயே, ஏன் என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். அவன் என் தோளில் கை போட்டுப் புன்னகைத்தான். ‘நீ மேலே ஏற, ஏற கைதட்டி மகிழ்வதற்கும், இன்னும் இன்னும் மேலே போ என்று ஆர்ப்பரிப்பதற்கும் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்தக் கூச்சலில் என் சிசரோவின் இதயத்தை அடைத்துவிடக் கூடாது! தவறாக ஓரடிகூட எடுத்து வைத்துவிடக் கூடாதே என்று பதைபதைப்போடு பார்ப்பதற்கு நான் ஒருவன்தான் இருக்கிறேன்! உன் புகழ், சாதனை, பெருமிதம் எதுவும் உன்னைவிட முக்கியமில்லை எனக்கு’ என்றான் அட்டிகஸ்.


ஒருவருக்கு ஓர் அட்டிகஸ் போதுமா என்று கேட்டால் ஒரு தோட்டத்தில் ஒரு செடி போதுமா என்று கேட்பேன். ஆரம்பத்தில் என் வகுப்பு, என் பள்ளி, என் வீதி, என் மதம் என்றுதான் நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் மட்டும் போதாது என்றே சொல்வேன். உங்கள் நம்பிக்கை, உங்கள் பண்பாடு, உங்கள் மொழி, உங்கள் நிலம், உங்கள் ஆர்வம் அனைத்தையும் கடந்து புதியவர்களைத் தேடிப் பிடியுங்கள்.


சமவயது நண்பர்கள் மட்டும் போதாது. மூத்தவர்களோடும் இளையவர்களோடும் பழகுங்கள். நீங்கள் ஆண் என்றால் பெண் நண்பர்களையும் நீங்கள் பெண் என்றால் ஆண் நண்பர்களையும் தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பார்வை விரிவடைவதை, சிந்தனை வளம் பெறுவதை, உள்ளம் வலுவடைவதை உணர்வீர்கள்.

நீங்கள் கலங்கி நிற்கும்போது உங்கள் நண்பரின் கரம் உங்கள் தோள்மீது படரும். நீங்கள் அஞ்சி நிற்கும்போது உங்கள் நண்பர் உங்கள் கரங்களை உறுதியோடு பற்றிக்கொண்டு உங்களோடு சேர்ந்து நடப்பார். உங்கள் பாதையில் இருள் மூடிக்கிடக்கும்போது அவர் மெழுகுவத்தியோடு தோன்றுவார்.


உங்கள் எதிரிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. நண்பர்களை நீங்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்க முடியும். அவசரமே வேண்டாம், பேசிப் பழகி, பொறுமையாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கான அட்டிகஸை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டால் மட்டும் போதாது. நீங்களும் ஓர் அட்டிகஸாக மாறவேண்டும். ஒரு நல்ல நண்பர் உங்களைச் செழுமைப்படுத்தியதுபோல் நீங்கள் இன்னொருவரைச் செழுமைப்படுத்த வேண்டும். ஒரு நல்ல நண்பர் உங்களை நிறைவு செய்ததுபோல் நீங்கள் இன்னொருவரைக் கண்டறிந்து அவர் குறைபாடுகளைப் போக்கி, அவரை நிறைவு செய்ய வேண்டும்.


நிறைவான மனிதன். நிறைவான வாழ்க்கை. நிறைவான உலகம். இந்த மாயத்தை நட்பு தவிர வேறு எதனாலும் நிகழ்த்த முடியாது.


மருதன்

மாய உலகம், மாயாபஜார்

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

மன அழுத்தம் DEPRESSION

 டிப்ரசன் மரணம் போல. Inevitable. வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோரையும் நிச்சயம் தாக்கும். ஆயிரம் கோடி பிசினஸ் தோல்வி போன்ற பெரும் காரணம் எல்லாம் தேவையில்லை. முடியுதிர்தல், முயன்றும் குறைக்க முடியாத உடல் எடை, வாய் துர்நாற்றம், செக்ஸ் புரிதல் இல்லாத துணை என மிக மிகச் சிறிய காரணங்கள் கூட இருக்கலாம். டிப்ரஷனின் உயிர் ஓவர் திங்கிங். இப்படி ஆயிட்டா… அப்படி ஆயிட்டா என சதா நேரமும் மூளையைக் குடைந்து அரித்தெடுக்கும். 


நண்பனுக்கு கன்னத்தில் ஒரு பெரிய தழும்பு இருந்தது. அழகானவன், ஆனாலும் தனது காதல் தோல்விகளுக்கு அத்தழும்பு தான் காரணம் என்ற மன அழுத்தம் வாழ்நாள் முழுவதும் இருந்தது. இருந்தது என்றால் அவன் இப்போது இல்லை என அர்த்தம். ஆகவே அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் தான் மன அழுத்தத்தின் கனம் புரியும். 


மன அழுத்தத்துக்கு பெண் ஆண் என பாகுபாடெல்லாம் இல்லை. Infact பெண்ணின் பெரும்பான்மை மன அழுத்தங்களுக்கு ஆணும், ஆணின் மன அழுத்தங்களுக்கு பெண்ணும் தான் காரணமாக அமைவர். அது புரியாமல், அடுத்தவர் இடத்தில் இருந்து அவன் மனவலியைப் பார்க்காமல் கேலி செய்யும் அனைவரையும் உயிரோடு உலவும் பிணங்கள் எனலாம். 


எவ்வித மன அழுத்தமும் தற்காலிகமானது, ஆனால் அதன் பிடியில் சிக்கும் போது கண்ணீர் சிந்தி தான் ஆக வேண்டும், கவலையில் தூக்கம் வராது. வாத்தா செத்து விடலாம் எனத் தோணும். கண்ணை மூடிக் கொண்டு அக்கணத்தை கடந்து விட வேண்டும். முடியவில்லையா குடித்து விட்டாவது உறங்கிவிடுங்கள். 


ஓவர் திங்கிக்கை கொல்வது சற்று கடினமே. இப்போது நாம் இருக்கும் Present நிகழ்வில் கவனத்தை இழுத்துப் பிடித்துக் குவிப்பது ஒரு எளிய பயிற்சி. திடீர் காதல்களில் ஈடுபடுவது, புதிய நட்புகள், புதிய முயற்சிகள் சிரிப்பை வரவழைக்கும். சமூக வலைதளங்கள் டிப்ரஷனின் கூடாரம். நம்மைத் தவிர அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரியும். ஆனால் அது ஒரு அல்காரித மாயை.


டிப்ரஷனில் இருந்து விடுபட சர்வ நிச்சயமாய் பயணங்கள் உதவும். பஸ் எல்லாம் ஏறாதீர்கள். டிவிஎஸ் 50 தான் இருக்கிறதென்றாலும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுங்கள். சோறு கூட வேண்டாம். நல்ல தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும் மலைப் பகுதிக்கு சென்று, சூடாக ஒரு கட்டஞ்சாயா அருந்துங்கள். அது தரும் கதகதப்பை அப்படியே நெஞ்சுக்குள் கடத்துங்கள். எவன் பாத்தா நமக்கென்ன என வாயில் பனி ஊதி ஒரு குழந்தையைப் போல உங்களை நீங்களே கொண்டாடுங்கள். டிப்ரஷன் சரியாகாது, ஆனால் வாழனும்டா என்ற தன்னம்பிக்கை பிறக்கும். தனித்த பயணங்கள் எந்த சூழ்நிலையையும் ‘சொல்றா மயிறே’ என சந்திக்க வைக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும்


மிக முக்கியமாக யார் என்ன நினைத்தாலும், உங்களை மகிழ வைக்கும் எதுவும் தவறில்லை. காரணம் வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02HDr7ZMzbWurx8iTY7xdjpNwaAkrPj2diqvN3KH6Lm1BUrNUgvENFXPAAvxcsAUu9l&id=100001577118446

சனி, 26 பிப்ரவரி, 2022

நம் பயணம் குறுகியது

 *இன்று காலையிலிருந்து 5 முறையாவது இதைப் படித்திருக்கிறேன்.  மிகவும் உண்மையாகவும் அழகாகவும் எழுதப்பட்டுள்ளது*


 💛 *நம் பயணம் குறுகியது*💛 *நமது நினைவில் வைக்கவும்*


 ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து,இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.  


 அந்த நபர் அமைதியாக இருந்தபோது, ​​​​அந்தப் பெண் உங்களை திட்டி கொண்டு இருக்கும் போது, ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.


 அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்: ஏனெனில்

 *எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால்* முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்"🥰


 இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். 💛


 இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது.


 யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா?  அமைதியாய் இருக்கவும்.ஏனெனில்

 *நம் பயணம் மிகவும் குறுகியது*.💛


 யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா?

 ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்.ஏனெனில்

*நம் பயணம் மிகவும் குறுகியது*.💛


 காரணம் இல்லாமல் யாராவது உங்களை அவமானப்படுத்தினார்களா?

 அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும்.ஏனெனில்

 *நம் பயணம் மிகவும் குறுகியது*.💛


 உங்களுக்குப் பிடிக்காத கருத்தை யாராவது தெரிவித்திருக்கிறார்களா?

 அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும்.  மன்னிக்கவும்,மறக்கவும் பழகி கொள்ளுங்கள்.ஏனெனில்

 *நம் பயணம் மிகவும் குறுகியது*💛


 சிலர் நமக்கு என்ன பிரச்சனைகளை கொண்டு வந்தாலும்,

 அதை நாம் நினைத்தால் தான் பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள்.

 *நாம் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியதாக உள்ளது*.💛


 நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது.  நாளை என்பதை யாரும் பார்க்கமுடியாது.  அது எப்போது நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது.


 *நாம் ஒன்றாகப் பயணம் செய்வது மிகக் குறைவு*💛


 நண்பர்களையும் குடும்பத்தினரையும் மற்றும் நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் அனைவரையும் பாராட்டுவோம்.  அவர்களிடம் நல்ல நகைச்சுவையுடன் பேசவும் அவர்களை மதிக்கவும்.  மரியாதையாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும் எப்போதும் இருப்போம்.ஏனெனில் *நம் பயணம் மிகவும் குறுகியது*💛


 உங்கள் புன்னகையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள் 💛எப்போதும் மறக்காதீர்கள்

 *நம் பயணம் மிகவும் குறுகியது* 💛

 

நாமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்..


*உலகெங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்*


*வாழ்க வளமுடன்*



🙏🙏🙏

திங்கள், 31 ஜனவரி, 2022

கொக்கென நினைத்தாயோ கொங்கணவா -

 கொக்கென நினைத்தாயோ கொங்கணவா -


பதினெண் சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் ஸ்டோரி தெரியாதவங்க மறக்காம படிங்க..


கொங்கணர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார்.. அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது...


.உடனே கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார்.. அது எரிந்து சாம்பலாயிற்று.


அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார்..வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம்.ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று.


நேரங்கடந்து பிச்சை கொண்டு வந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார்..


உடனே வாசுகியார் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார்


அஞ்சிய கொங்கணர் வாசுகியைப் பணிந்தார், பின்னர் திருவள்ளுவர் சீடரானார்...

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

ஆட்டு மந்தை கோட்பாடு.

 ****ஆட்டு மந்தைக் கோட்பாடு****


2005 ஆம் ஆண்டு துருக்கியிலுள்ள ஒரு கிராமப்புறத்தில் ஒரு வினோத சம்பவம் நடைபெற்றது.


மலைப்பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று மலை உச்சியில் ஏறி அருகாமையில் உள்ள மலைப் பாறை மீது குதித்துப் பார்த்துள்ளது. இரு மலைகளுக்கு இடைப்பட்ட தூரம் அதிகம்

என்பதால் அந்த ஆடு கீழே விழுந்து மாய்ந்து போனது.


இதில் அதிசயம் என்னவென்றால், அதனைப் பின்தொடர்ந்து அங்கே மேய்ந்து கொண்டிருந்த சுமார் 1500 ஆடுகளும் ஒன்றின் பின் ஒன்றாக அப்படியே, அதேபோல் துள்ளிப் பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளன!

பிற்காலத்தில் "ஆட்டு மந்தைக் கோட்பாடு"(herd behaviour) பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இச்சம்பவம் பிரதான காரணமாக மாறியது.


நவீன வாழ்வியல் முறைகளில் நமது உணவு, உடை, நடை பாவனைகளை நாம் உன்னிப்பாக கவனித்தால், ஆட்டு மந்தைக் கோட்பாட்டை அணுவளவும் பிசகாது நாம் கடைப்பிடிப்பதை கண்டு

கொள்ளலாம்.


தப்பென்று தெரிந்து கொண்டும் குறித்த சடங்கு சம்பிரதாயத்தை, கலாச்சாரம் சார்ந்த திணிப்புக்களை நாம் தழுவித் தான் ஆகவேண்டும் என்பதே "ஆட்டு மந்தை" கோட்பாடாகும்.


ஆட்டங்கள் கொண்டாட்டங்களை எல்லோரும் ஆடுகிறார்கள் கொண்டாடுகின்றனர் என்பதற்காக நாமும் ஆடுகிறோம், கொண்டாடுகிறோம்.

திருமண விழாக்களை, குடும்ப நிகழ்வுகளை எல்லோரும் ஆடம்பரமாக ஆரவாரமாக எடுப்பதற்காகவே நாமும் அனாவசியமான செலவுகளை செய்கிறோம்.


வீடு கட்டும் போது, வாகனங்கள் வாங்கும் போது எல்லோரும் செய்வது போன்றே நாமும் செய்கிறோம்.


கிழிந்த, அசிங்கமான ஆடை மாடல்களை எல்லோரும் அணிகிறார்கள் என்பதற்காக

நாமும் அணிகிறோம்.


அருவருப்பான சிகை அலங்காரங்களை எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்கிறோம்.

இங்கு நாம் சுயபுத்தி பறிக்கப்பட்டவர்கள் போல…

முடிவெடுக்க மறுக்கப்பட்டவர்கள் போல…

சமூக, பொருளாதார, கலை, கலாச்சாரம் என வாழ்வின் பன்முகப்பட்ட போக்குகளிலும்

ஆட்டு மந்தைக் கூட்டத்தை பின்தொடர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.


நிச்சயிக்கப்பட்ட அழிவின் பாலும், கண் காணும் அதல பாதாளத்திற்கும் நம்மைத் தள்ளி விடும் என்று தெரிந்து கொண்டே நாமும் பின்தொடர்வது வேதனைக்குரியதே.


~ நன்றி குரா சுகந்தவாணன்

வெள்ளி, 14 ஜனவரி, 2022

இறைவனிடம் கையேந்துங்கள்

 


இறைவனிடம் கையேந்துங்கள் மெலனீசியத் தீவுகளில் ஓர் தீவு, தென்மேற்கு பசிபிக் கடல். 2-ம் உலகப்போர் உக்கிரமாக இருந்த நேரம். அந்தத் தீவின் பழங்குடியினர் வெளியுலகு தொடர்பு இன்றி வாழ்ந்து வந்தனர். வெளியாட்களை அதுவரை பார்த்ததே இல்லை. அப்படி இருந்த போது, போர் காலத்தின் நடுவே ஒருநாள்...


ஜப்பானியப் படைகள் அந்தத் தீவில் இறங்கினர். அது அவர்களுக்கு நேச நாட்டுப்படைகளை எதிர்கொள்ள ஏதுவாக இருந்தது. இறங்கியதும் அவர்கள் செய்த முதல் வேலை வானூர்தித் தளம் & கட்டுப்பாடு அறை கோபுரம் அமைத்தது. ராணுவ-வானூர்தி வழியாகத் தான் அந்த வீரர்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் ஆயுதங்கள


ஆகியன கிடைத்தன. ஆனால் அந்தத் தீவு மக்களோ அவர்களை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். "அட்டேன்ஷன்...!" என ஒருவர் கத்தினார். உடனே சிலர் வேக வேகமாக ஓடிவந்து வரிசையில் நின்றனர். சிலர் கட்டுப்பாட்டு அறை உள்ள கோபுரத்திற்கு ஓடினர். ஒருவர், வானூர்தித் தளத்தில் நின்று கொண்டு கையை


விரித்துக்கொண்டு மேலே பார்த்தார். குட்டி வானூர்தி ஒன்று தரையிறங்கியது. அந்த சைகை காட்டி ஏதோ சமிக்ஞைகளைச் செய்தார். வானூர்தி நின்றது. அதிலிருந்து பெட்டி பெட்டியாக இறக்கப்பட்டது அதிலிருந்து சில உணவுகள், ஆடைகள் ஆகியன அந்தப் பழங்குடியினருக்கும் வழங்கப்பட்டன எப்போதெல்லாம் வானூர்தி


வருகிறதோ அப்போதெல்லாம் சுவையான உணவுகள் அழகிய ஆடைகள் அந்த மக்களுக்கும் கிடைத்தன. சில நேரங்களில் வானூர்தி மேலிருந்து அவற்றை வீசிவிட்டுச் சென்றன. கட்டுப்பாட்டு அறையில் வீரர்கள் அவற்றை உறுதி செய்தனர். இதற்கு இடையில் போரின் போக்கு மாறியது. (அமெரிக்க இணைந்த) நேச நாட்டுப்படையினர்


ஜப்பானியர்களை வென்றனர். அவர்கள் அந்த மெலனீசியத் தீவுகளைக் கைப்பற்றினர். அந்தத் தீவு மக்கள் அவர்களையும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். "அட்டேன்ஷன்!" என ஒருவர் கத்தினார். உடனே சிலர் வேக வேகமாக ஓடிவந்து வரிசையில் நின்றனர். சிலர் கட்டுப்பாட்டு அறை உள்ள கோபுரத்திற்கு ஓடினர். அவர்களும்


வானூர்தித் தளத்தில் நின்று கொண்டு கையை விரித்துக்கொண்டு ஏதேதோ சைகைகள் செய்தனர். முன்பு வந்த ஜப்பானியர்கள் என்னவெல்லாம் செய்தனரோ அதனைப் போலவே செய்தனர். வானூர்திகள் வந்திறங்கின. சில நேரங்களில் மேலிருந்து பொருட்கள் வீசப்பட்டன. அப்போதெல்லாம் அந்த மக்களுக்கு உணவும் ஆடையும் கிடைத்தன


போர் முடிந்து அனைத்து வீரர்களும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். ஆண்டுகள் பல உருண்டோடியது. மீண்டும் சிலர் அந்தத் தீவிற்குச் சென்று பார்த்தால் அதிர்ச்சி! அவர்களுடன் மெல்லப் பேச்சுக் கொடுத்தப் பின் முழுதுவம் விளங்கியது. "மேலிருந்து கடவுள் வந்தார். அவர் சிலரை


இங்கு விட்டுச் சென்றார். அவர்கள் பூசைகள் செய்தனர். எப்போதெல்லாம் பூசை செய்தனரோ அப்போதெல்லாம் கடவுள் தோன்றி உடனே உணவு ஆடை என பலவற்றை கொடுத்தார். பின் அவர்கள் சென்றுவிட்டனர். அதன் பிறகு வருவதே இல்லை" என்றனர். "அந்தக் கடவுள் எப்படி இருப்பார்?" "அப்படி" அவர்கள் காட்டியது வானூர்தி


அவர்கள் வானூர்தியை கடவுளாக எண்ணி முங்கிலால் வானூர்தியை செய்து வணங்கி வந்தனர் அது மட்டுமல்ல. அந்த வீரர்கள் பயன்படுத்திய கட்டுப்பாட்டு அறையை போன்றும் மூங்கிலால் செய்து வைத்துள்ளனர் மேலும் வீரர்கள் பயன்படுத்திய வாக்கிடாக்கி, ஹெட்ஃபோன், பைனாக்குலர் அகிவற்றையும் செய்து வணங்குகிறனர்


அவ்வப்போது தவறாமல் மூங்கில்களால் துப்பாக்கியைப் போல செய்து நடைபயின்று பூசை செய்கிறனர். இவற்றை பற்றி எல்லாம் எடுத்துக் கூறியும் தம் நம்பிக்கையை மாற்ற மறுக்கிறனர். இதனை cargo cult எனக் கூறுவர். இணையத்தில் தேடினால் இதைவிட அதிக தகவல் கிடைக்கும். Correlation doesn't imply causation


இதனை "The Improbability Principle" என்ற புத்தகத்தில் David J Hand என்ற Imperial College கணிதப் பேராசிரியர் எழுதியுள்ளார். அரிய நிகழ்வுகள், அதிசயங்கள், அதிர்ஷ்டம், அமானுஷ்யம், கடவுள் நம்பிக்கை ஆகியவை ஏற்படும் காரணங்களை கணித வழியில் விளக்குகிறார். இதிலிருந்து அதிகம் எழுதுகிறேன்.


புதன், 12 ஜனவரி, 2022

CAFE Coffee day மீண்டு வந்த கதை

 "இவள் ஒரு இரும்பு பெண்மணி"


இந்தியாவின் மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா. இந்தியாவிலேயே மிக அதிகமான காப்பித் தோட்டங்களுக்கு சொந்தக்காரர்.


'கஃபே காபி டே' (Cafe Coffee Day)யின் உரிமையாளர்.

13,000 ஏக்கர் காப்பி தோட்டங்கள்.

நாடெங்கும் 1,600 காபி டே கடைகள்.


நேர்மையும் பண்பும் நிறைந்தவர். பாரம்பரிய செல்வந்தர் குடும்பத்தின் வாரிசு.

இன்னுமொரு செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த அன்பான மனைவி. ஆசைக்கும் ஆஸ்திக்குமாக இரண்டு அருமையான குழந்தைகள்.

2019 ஜூலையில் சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார்.

"நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை முடக்கி விட்டது. வங்கி கடன் கணக்குகள், நிறுவன பரிவர்த்தனைகள் அனைத்தும் முடங்கிவிட்டன. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர்" என்று விரக்தியுடன் தற்கொலைக் கடிதத்தில் கூறியிருந்தார் சித்தார்த்தா.


இந்த மரண சாஸனம் மத்திய அரசின் மனசாட்சியை உலுக்கியது. அந்த வாரமே வருமான வரி துறையில் பல மாற்றங்களை அறிவித்தார், நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்.


அந்த சம்பவத்தில் அனைவரையும் கலங்கவைத்தது தனது கணவரின் முகத்தை பார்க்கக் கூட மன உறுதியில்லாமல் கதறி தவித்த அவரது மனைவி மாளவிகாவின் துயரம்.


மாளவிகா ஹெக்டே யார் என்பது அந்த சம்பவத்துக்கு முன்னர் சிலருக்கே தெரிந்திருக்கும்.


மாளவிகா, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் செல்ல மகள்.


மாளவிகாவுக்கு கணவன் விட்டுச்சென்ற நினைவுகள் மட்டுமல்ல, பாக்கி வைத்த கடனும் மிக அதிகம். சுமார் 7,000 கோடிகள்.


மாளவிகாவை சுற்றி வளைத்த கஷ்டங்கள் இரும்பு மனிதர்களையும் துவண்டு விடச்செய்யும்.

ஒருபுறம் கணவரின் எதிர்பாராத மரணம். மறுபுறம் ரூ. ரூ.7,000 கோடி கடனில் சிக்கி மூழ்கிவரும் கணவரின் கனவு நிறுவனம்..

நிறுவனத்தில் பின்னி பிணைந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம்.

கடனை திருப்ப செலுத்த நெருக்கும் வங்கிகள், கடன்காரர்கள்.

இது எதுவும் புரியாத வயதில் இரண்டு பிள்ளைகள்.

கோடிகளில் நாட்டையும் வங்கிகளையும் ஏய்த்து விட்டு வெளிநாடு தப்பி சென்று விட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்று மாளவிகாவும் எளிதில் வெளியேறியிருக்கமுடியும்.


ஆனால் மாளவிகா ஒரு கடினமான முடிவை எடுத்தார்.


மனத்தை தேற்றிக்கொண்டு 'காபி டே' நிறுவனத்தின் தலைமை அலுவலக படிகளில் ஏறினார். அதன் நிர்வாக பணிகள் அனைத்தையும் கற்று தேர்ந்தார்.


2020ல் அதை வழிநடத்தும் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். சித்தார்த் விட்டு சென்ற அதே CEO நாற்காலியில் அமர்ந்தார்.


முதலில் 10 கோடி, 20 கோடி என்று சிறு, சிறு கடன்களை அடைத்தார்.

பெரிய கடன்களை தள்ளி செலுத்த வங்கிகளிடம் அவகாசம் கேட்டு பெற்றார்.

இலாபம் தராத இடங்களில் 'காபி டே' கிளைகள் மூடப்பட்டன. முக்கிய வணிக வளாகங்களில் புதிய கிளைகள் திறக்கப்பட்டன.

தொழிலாளர்களோடு நல்லுறவில் இருந்தார். அவர்களும் தோள் கொடுக்க தயங்காமல் நின்றனர்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கான வலியை ஏற்றுக்கொண்டார். குடும்ப சொத்துக்கள், நிறுவனத்தின் சொத்துக்கள் விற்கப்பட்டன.

அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக, ஒரே ஆண்டில் நிறுவனத்தின் கடன் பாதியாகக் குறைந்தது.

மார்ச் 2019 இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் கடன் ரூ. 7,200 கோடி. மார்ச் 2020 இறுதியில் அது ரூ. 3,100 கோடியாகக் குறைக்கப்பட்டது.

முதலீட்டாளர்களிடம் புதுநம்பிக்கை. ஊழியர்களிடம் முழு உற்சாகம்.

இன்று மீண்டும் தன்னை கட்டியெழுப்பி நிமிர்ந்து நிற்கிறது Cafe Coffee Day.


இந்த தருணத்தில் மாளவிகா ஹெக்டே எகனாமிக் டைம்ஸுக்கு அளித்த பேட்டி தன்னம்பிக்கைக்கு ஒரு பாடம். எவ்வளவு தெளிவு, தன்னம்பிக்கை, மனதில் எத்தனை விடாமுயற்சி என்று மலைக்க வைக்கிறது.


'நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன், கணவரின் கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவேன்' என்றும் அந்த பேட்டி முடிகிறது.


பெண்மையை தெய்வமாக வணக்கும் இந்திய மண்ணின் சக்தி என்ற சொல்லுக்கு முழுமையான அர்த்தம் மாளவிகா.


விதிக்கு அடிபணித்தார் சித்தார்த்.


விதியை எதிர்த்து நின்று போராடுகிறார் மாளவிகா.


பகிர்வு

சனி, 8 ஜனவரி, 2022

 நோக்கியா கைபேசி நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கியது.


அப்பொழுது நடந்த செய்தியாளர் சந்திப்பில், நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் அவருடைய உரையை நிறைவு செய்யும் போது கூறிய வார்த்தைகள்...


"நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் தோற்று விட்டோம்." 


இந்த வார்த்தைகளைக் கூறும்போது அவர் மட்டும் அல்ல, அவருடைய மொத்த நிர்வாக குழுவும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டனர்.


நோக்கியா ஒரு உலகப் புகழ் பெற்ற மரியாதைக்குரிய நிறுவனம். தொழில்ரீதியாக அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை.


ஆனால் உலகம் வெகு வேகமாக மாறிக்கொண்டிருந்தது. 


நோக்கியா எதிர்காலம் எப்படி மாறும் என்று கணிக்கத் தவறி விட்டது,


நோக்கியா எதிர்காலத்திற்கான திட்டங்கள் மற்றும் தங்களை மெருகேற்றிக் கொள்ளத் தவறி விட்டது.


உலகின் மிகப்பெரிய நிருவனமாகும் வாய்ப்பு,மிகப்பெரும் பொருள் ஈட்டக் கூடிய ஒரு வாய்பு தொழிலில் நிலைத்து நிற்கக் கூடிய வாய்ப்பு போன்ற வற்றை இழந்தது,


  நோக்கியாவின் கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்:-


நீங்கள் காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களையும், உங்கள் தொழிலையும்  மெருகேற்றாவிட்டால், போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள்.


நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால், உங்கள் எண்ணங்களும் மனநிலையும் கால ஓட்டத்திற்கு தகுந்தவாறு விரைவாக ஓட முடியாவிட்டால், உங்கள் நேரம் முடிந்துவிடும்.


ஒரு மனிதன் தன் தோல்வியின் தவறை திருத்திக்கொண்டு புதிது புதிதாக கற்றுக் கொண்டு களம் காணும் வரை வெற்றிகரமாக இருக்கிறான்.

என்பதற்கு

 "ROYAL ENFIELD" 

சிறந்த உதாரணம். 


 படித்தது.