வெள்ளி, 11 நவம்பர், 2022

ஆசிரியரின் கருத்துகளை நேசி ஆசிரியரை அல்ல


புத்தர் மேல் மிக பாசம் வைத்திருந்த சீடர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் வைகாலி.


திடீரென ஒரு நாள் புத்தர் அவரை பார்க்க மறுத்துவிட்டார். ஏன் என வைகாலிக்கு புரியவில்லை. அதன்பின் பல ஆண்டுகள் ஒரு மலை மேல் இருந்து புத்தரை பார்த்து வந்தார்.


புத்தருக்கு உடம்பு சரியில்லாமல் உயிர் போகும் தருணம். வைகாலிக்கும் அப்போது வயது முதிர்ந்திருந்தது. பல ஆண்டுகள் கழித்து புத்தரை பார்க்க வைகாலி போனார். மரணபடுக்கையில் இருந்த புத்தரின் கைகளை பிடித்தார்.


"நான் என்ன தவறு செய்தேன்" என கண்ணீர் மல்க கேட்டார் வைகாலி.


"வைகாலி....நான் உன் ஆசிரியன். ஆனால் என் உடல் உன் ஆசிரியன் அல்ல. நான் உனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் மட்டுமே உன் ஆசான். தனிப்பட்ட மனிதனான என்னை நேசிக்காதே. நான் கற்றுத்தந்த பாடங்கள் தான் உன் ஆசான் என நினைத்தால், எனக்கு அதன்பின் அழிவே இருக்காது. இந்த உடல் தான் நான் என நினைத்தால் இன்னும் சில மணிநேரங்களில் உன்னை விட்டு நான் பிரிந்துவிடுவேன்" என்றார் புத்தர்.


ஆசிரியரை தெய்வமாக்காமல் அவரது கருத்துக்களை மட்டும் உள்வாங்கினால் அதன்பின் ஆசிரியர் நம்மை விட்டு எங்கேயும் போகப்போவது இல்லை, நம் மனதில் உருவாக்கும் சிந்தனைகள் மூலம் சிரஞ்சீவியாக வாழ்வார்.

புதன், 2 நவம்பர், 2022

புத்திசாலி சிறுவன்

 அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது.


அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம்

இல்லை. யானையை அளக்கும் அளவுக்குப்

பெரிய தராசும் கிடையாது.


யானையின் எடையை எப்படி அறிவது?

என்று அமைச்சர்களிடம் கேட்டார் மமன்னர்


யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை.


அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்'என்றான். 


அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.


ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.


அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான்.


அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான்.


யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான்.


பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான்.


முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும்வரை கற்கள் ஏற்றப்பட்டன.


பின்பு அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, "அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை" என்றான். 


அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.


எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். 


ஆகவே, அவர்களால் அதன் எடையைக்கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. 


ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்;


எளிதில் விடை கண்டான்.


எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச்சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும்.


பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். 


அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.


#படித்ததில்_பிடித்தது