செவ்வாய், 25 ஏப்ரல், 2017

யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்

யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்!!

யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்!!!

விஞ்ஞானி ஒருவர்,

தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.

கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்கக் போகும் போது. கால் இடறி கீழே விழுந்தார். கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது.

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான். அந்த வழிப்போக்கன், இவரைப் பார்த்து ஐயா என்ன ஆச்சு என்றான். இவரோ, இவனிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது?’ என்று எண்ணியபடி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம் என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான். அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.

‘இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம்’ என்று எண்ணி அவனிடம், ‘நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள்’- என்றார் விஞ்ஞானி.

‘ஒ! இது தான் உங்கள் பிரச்சனையா? நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது. மூன்று சக்கரங்களில் இருந்தும் தலா ஒரு போல்ட்களை கழட்டி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியை தயார் செய்து கொள்ளுங்கள், பிற்பாடு அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஓட்டிச் சென்று 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்’- என்று சொன்னார் வழிப்போக்கர்.

‘நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், எனக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே! இவரைப் போய் குறைத்து எடை போட்டு விட்டோமே!’ என்று தனக்குள் கூறிக் கொண்டு தலை குனிந்தார் விஞ்ஞானி.

நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது,

ஆம்நண்பர்களே,

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;

உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு;

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். அதே ஒரு தீக்குச்சியினால், பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம். எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.க

ஊரைச் சுற்றிவந்த உருளைக்கிழங்கு வண்டியின் கதை!*

#MorningMotivation

*Motivation!*

ஊரைச் சுற்றிவந்த உருளைக்கிழங்கு வண்டியின் கதை!*

மீசைக்கார மன்னாரு கடும் கோபமாக இருந்தார். எல்லா கமிஷன் மண்டிகளின் வண்டிகளும் வந்து கொண்டிருந்தன. இவரது லாரி மட்டும் வந்த பாட்டைக் காணோம். ‘வாரா வாரம் இவனுக்கு இதே வேலையாப் போச்சு’ என்று கொஞ்சம் சத்தமாகவே அலுத்துக் கொண்டார்.

”என்ன மன்னாரு.. ஒங்க மிஸ்டர் கே இன்னைக்கும் சோதிக்கறானா?” - பக்கத்து மண்டி பரமசிவம்தான் கேட்டது.

“ஆமா.. நீ உன் வேலையப் பாருய்யா...”



”என்கிட்ட கோச்சுட்டு என்ன பண்ண? அவனை வேலைக்குச் சேத்தப்பவே சொன்னேன். கொஞ்சம் ஓவராப் பேசற பயலா இருக்கான்னு. ரெண்டு வாரமா லேட்டா வந்தான் சரி. இன்னமும் அப்டின்னா என்ன அர்த்தம்? இந்தா இருக்கற உப்பிலிபாளையத்துல இருந்து வர ஒரு மணிநேரம் பண்ணுவானாக்கும்?  கொஞ்சம் அதட்டி வை”

மன்னாரு திரும்பிப் பார்த்தார். பரமசிவம் மண்டியில் உருளைக்கிழங்கு லோடு இறங்கி, பத்து பேர் ஆளுக்கொரு மூட்டையைப் பிரித்து சைஸுக்கு ஏற்ற வகைகளாகப் பிரிக்க ஆரம்பித்திருந்தனர்.

”உன் வண்டி வந்து வேலைய ஆரம்பிச்சுட்டீல்ல? போய் அதப்பாரு. அவன் வந்தா நான் கேட்டுக்கறேன்.. போ போ...” - என்றார் மன்னாரு. என்ன இருந்தாலும் மிஸ்டர் K மேல் அவருக்கு ஒரு தனி கரிசனம். அவன் வேலைக்கு சேர்ந்து ஒருமாதம்தான் ஆகிறது. கொஞ்சம் கோக்குமாக்கு செய்தாலும், எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் வைத்திருப்பான்.



இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

’’நடிகைகளை பக்கத்துல வைச்சுட்டு டபுள் மீனிங் வசனங்கள் வேண்டாம் ப்ளிஸ்!” ’மகளிருக்காக’ ஜோதிகா



சரியாக முக்கால் மணிநேரம் கழித்து உருளைக்கிழங்கு லோடுடன் மினி லாரியை ஓட்டிக் கொண்டு வந்தான் மிஸ்டர் K. வண்டியை திருப்பி நிறுத்திவிட்டு இறங்கினான். மன்னார் கோபமாக வந்தவர், அவன் இறங்கிய வேகத்தைப் பார்த்து அப்புறம் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

மிஸ்டர் K பெரிய தார்ப்பாயை விரித்து, லோடை இறக்கச் சொன்னான். மூட்டை போடப்பட்டிருக்கவில்லை. மினி லாரியிலிருந்து கொஞ்சம் இறக்கி, தார்ப்பாயை மாற்றி, அடுத்த தார்ப்பாயை விரித்து அதில் கொஞ்சம் கொட்டி இப்படி மினி லாரியைக் காலியாக்கினார்கள். பிறகு வண்டியை தள்ளி நிறுத்தினான்.

ஐந்தாறு ஆட்களை அழைத்துக் கொண்டான்.  உருளைக்கிழங்கை பெரிய சைஸ், நடுத்தரம், சின்ன சைஸ் என்று பிரிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மணிநேரத்தில் வேலை முடிந்ததும் மூட்டை போட்டார்கள். அடுக்கி வைத்து, வியாபாரிகள் வர, விலை பேச ஆரம்பித்தார்கள். ஒரு மணிநேரத்தில் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட மன்னாரு, மிஸ்டர் Kஐ தனியாக அழைத்தார்.

“இங்கன வா... கொஞ்சம் பேசணும்”

“சொல்லுங்க மொதலாளி” என்றான் மிஸ்டர் K பவ்யமாக.

“இந்தா இருக்குது உப்பிலிபாளையம். அங்கிருந்து வர்ற மினி லாரிலாம் இந்த டவுன் மண்டிக்கு கால் மணிநேரத்துல வருது. நீ அவங்களை மாதிரி மூட்டைகூட போடறதில்ல.. நெலத்துல இருந்து உருளைக்கிழங்கை வண்டில அள்ளிப்போட்டுட்டு  கிளம்பி வர்ற, ஆனாலும் லேட்டா வர்ற. ஏன் இப்டி? எங்கதான் சுத்திட்டு வருவ?”

“மொதலாளி... நான் எப்ப வந்தா என்ன.. மத்த மண்டிக்காரங்களுக்கு முன்னாலயே நாம விக்க ஆரம்பிச்சுடறோம்ல?”

“அதான் என்ன பண்றன்னு கேட்டேன்!?”

“ஒண்ணுமில்ல மொதலாளி... அவிங்கள்லாம் அங்க மூட்டை போட்டுட்டு வந்து, இங்க அதக் கொட்டி பெரிசு, மீடியம், சின்னதுனு இங்க வந்து பிரிக்கறாங்க. நான் என்ன பண்ணுவேன்னா, அங்க மூட்டை போடமாட்டேன். மொத்தமா வண்டில கொட்டிடுவேன். அப்பறமா நேர்ரோட்ல வராம, ஊரைச் சுத்தி  வருவேன். ரோடே இருக்காது. இருக்கற ரோடும் மேடு பள்ளமா இருக்குமா.. உருளைக்கிழங்கெல்லாம் உருண்டு சின்னது கீழ, பெரிசு மேலனு அததுவா செட்டாகிடும். வந்து கொஞ்சம் பார்த்து இறக்கினா போதும்.  மத்த கடைக்காரங்க 10-15 பேர் வெச்சுப் பிரிப்பாங்க. நான் அதையே அஞ்சாறு ஆள் வெச்சு முடிச்சுடுவேன். ஏன்னா முக்காவாசி சைஸ் பிரிச்ச மாதிரிதான் இருக்கும்.. ஆள் கூலியும் மிச்சம். புரியுதா மொதலாளி?” என்றான்.

****************************************************************

செல்லூர் ராஜுவின் நீர் - ஆவி- தெர்மாகோல் திட்டமாகட்டும், அண்ணா சாலை  அதளபாதாள சாலை ஆனதாகட்டும் - காரணம் என்ன?  தெளிவான திட்டமிடல் இல்லாமை! திட்டமிட்டால் எந்தச் செயலையும் சிறப்பாக முடிக்கலாம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் மேலே மிஸ்டர் K செயல்படுத்தியது.

ஒரு மிகப்பிரபலமான இயக்குநரிடம், ‘உங்கள் அடுத்த பட வேலைகள் எந்த நிலையில் இருக்கிறது?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னாராம்.

“இன்னும் 10% தான் பாக்கி”

“ஷுட்டிங் ஆரம்பித்தமாதிரியே தெரியவில்லையே?”

“எஸ். ஷுட்டிங் மட்டும்தான் பாக்கி”

ஆம். அவர்கள் முழுமையான ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டுதான் வேலையையே ஆரம்பிப்பார்கள். ஒரு மாற்றமும் தேவையிராது. திட்டமிட்டு முடிக்கும் செயலுக்கு வெற்றி நிச்சயம்.

இவ்வளவு பெரிய கட்டுரையை வடிவேலு ஸ்டைலில் ஏழே வார்த்தைகளில் சொல்லிவிடலாம்!

‘எந்த ஒரு விஷயத்தையும்  ப்ளான் பண்ணிப் பண்ணணும்! வோக்கே?

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

ராவணனை போன்று சகோதரன் வேண்டும்

ஒரு கருவுற்ற தாய் தன மகளிடம் கேட்கிறாள்,"உனக்கு தம்பி வேண்டுமா இல்லை தங்கை வேண்டுமா?"

மகள் : தம்பி

தாய் : யாரைப் போல?.

மகள் : ராவணனைப் போல.

தாய் :ஏன் இப்படி முட்டாள்தனமா பேசற? உனக்கு புத்தி இல்லையா?.

மகள் : ஏன் இல்லாம அம்மா? இராவணன் தனது ராஜபோக வாழ்வையும், ராஜ்யத்தையும் தனது சகோதரி அவமதிக்கப்பட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக இழந்தவர்.
அவர் தனது எதிரியின் மனைவியை சிறை வைத்தபோதும், சீதையை அவளது விருப்பத்திற்கு மாறாக தீண்டவில்லை. எனக்கு ஏன் அப்படி ஒரு சகோதரன் இருக்க கூடாது?
ஒரு சலைவை தொழிலாளி கூறினான் என்பதற்காக, தன்னுடன் நிழலை போல வாழ்ந்து வந்த கர்ப்பவதியான தன மனைவியை பிரிந்த ராமரைப் போன்ற ஒரு சகோதரன் எனக்கு எதற்கு?
பதினான்கு ஆண்டு வனவாசமும், அக்கினி பரீட்ச்சையும் செய்து தன கற்பை நிரூபிக்க போராட வைத்த ஒருவரை  எப்படி சிறந்தவராக நினைக்க முடியும்?.
அம்மா, நீ ஒருவருக்கு மனைவியாகவும், வேறொருவருக்கு சகோதரியாகவும் இருந்து கொண்டு, நீ ஏன் உன் மகன் "ராமரை"போல இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறாய்???

தாயின் கண்களில் கண்ணீர் வந்தது.

நீதி : இந்த உலகிலே நல்லவர் கேட்டவர் என்று யாரும் இல்லை, அவை எல்லாம் ஒருவருடைய கணிப்பே. உங்கள் கண்ணோட்டத்தை மாத்துங்கள்.

கிளப்புக்கு போறவங்க எல்லாம் மோசமானவங்களும் இல்லை, கோயிலுக்கு போறவங்க எல்லாம் தூய்மையானவங்களும் இல்லை.

நிதர்சன உண்மை.

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

அன்பு( செருப்பு -பிணம் கதை)

ஒரு குட்டி கதை

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...
ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

அவ்வளவுதான்க வாழ்க்கை
ஒரு செருப்புக்கு கிடைக்குற மறியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...

(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மறியாதை)

திங்கள், 3 ஏப்ரல், 2017

ஒற்றுமை (புறா கதை)

ஒரு குட்டி கதை.....

ஒரு ஊரில் பெரிய *கோயிலில் கோபுரத்தில்*
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,

திடீரென்று *கோயிலில் திருப்பணி* நடந்தது

அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன

வழியில் ஒரு *தேவாலயத்தை கண்டன*

அங்கும் சில புறாக்கள் இருந்தன

அவைகளோடு இந்த புறாக்களும்
குடியேறின.

சில நாட்கள் கழித்து *கிறிஸ்துமஸ்*
வந்தது.

தேவாலயம் புதுப்பிக்க தயாரானது

இப்போது இங்கு இருந்து சென்ற
பறவைகளும்
அங்கு இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு *மசூதியை கண்டது*

அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு
இந்த புறாக்களும் குடியேறின

சில நாட்கள் கழித்து *ரமலான்*வந்தது
வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின...

*கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.*

ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது

"நாம்
இங்கு இருந்த போதும் புறா தான்,

தேவாலயத்துக்கு போனபோதும் புறா
தான்,

மசூதிக்கு போன போதும் புறா தான் ",

"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
சர்ச்க்கு போனால்
கிறிஸ்த்தவன்"
மசூதிக்கு போனால்"முஸ்லிம்" என்றது;

குழம்பிய குட்டி புறா"
*அது எப்படி நாம் எங்கு
போனாலும் புறா தானே அதுபோல தானேமனிதர்களும் "என்றது.

அதற்கு தாய் புறா "
இது புரிந்ததனால்
தான் நாம் *மேலே இருக்கிறோம்,*
அவர்கள்  *கீழே இருக்கிறார்கள்"* என்றது..
(படித்தது)

சனி, 1 ஏப்ரல், 2017

ஆசிரியர் பணி

டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்..

அரசு முறை பயணமாக 'மஸ்கட்'டுக்கு செல்கிறார்..

அந்த நாட்டின் மரபை மீறி அரசரே விமான நிலையம் வந்து அவரை  வரவேற்க காத்திருகிறார்..

விமானம் நின்று படிகள் இணைக்கப் பட சர்மா அவர்கள் வெளிப்படுகிறார்..

அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அளவளாவிக் கொண்டு இறங்கி வருகிறார்..

இது அந்நாட்டு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது..

எதுவும் காட்டிக் கொள்ளவில்லை, அரசர் ஆயிற்றே..

ஆயிற்று..

அரசு சார்ந்த காரியங்கள் அனைத்தும் முடிந்து  இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பு நடைபெறுகிறது...

சம்பிரதாய கேள்விகள் முடிந்து அந்த நாட்டு பத்திரிகை நிருபர்
அந்த கேள்வியை அரசரின் வைக்கிறார்..

"இதுநாள் வரை எத்தனையோ நாட்டின் உயர் தலைவர்கள் வந்த போதும் நேரில் வராத அரசர் ஒரு ஜனாதிபதியை வரவேற்க ஏன் மரபை மீறி வரவேண்டும், அப்படி என்ன அவர் சிறப்பு".???

அங்கே ஒரு சிறு சலசலப்பு..

அரசர் பதிலளிக்கிறார்,
" நான் இப்போது அரசனாக இருக்கலாம்,
அவர் ஜனாதிபதியாக இருக்கலாம்,
ஆனால் நான் இந்தியாவில் பூனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எனக்கு கல்வி போதித்த ஆசான் அவர்..

வெறுமனே கல்வி போதித்தலையும் தாண்டி அந்நாட்டின் கலாச்சார பண்பாடுகளைப் பற்றிய தெளிவான பார்வையை எனக்கு கொடுத்தவர்..

இன்றளவும் நான் ஓரளவு பண்பானவனாக இருப்பதாக நினைப்பதற்கு அவரின் தோழமையான வழிகாட்டுதலும் ஒரு காரணம்"..

"இந்திய மண்ணில் கல்வி போதிக்கும் ஆசிரியரை  கடவுளுக்கு நிகராக போற்றுகிற பண்பாடு கொண்டவர்கள் அவர்கள்..

கொஞ்சம் காலம் நானும் அந்த மண்ணில் இருந்தவனில்லையா..?

அந்த பண்பாடு எனக்கும் வருவதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது"..
என பெருமையாக குறிப்பிடுகிறார்..

சர்மா அவர்களுக்கு பூரிப்பாக இருக்கிறது, ஒரு அன்னிய தேச மாணவனுக்கு சிறப்பான பண்பை போதித்த ஆசிரியராக நெகிழ்வில் அவர் குழைந்து போகிறார்..

உள்ளுக்குள் இந்த ஸ்லோகம் ஒலிக்கிறது அவருக்கு...

பலம்

🌺🌺🌺 ஜப்பானிய சாமுராய் வீரனின் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.அதிலும் குறிப்பாக,ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.ஆகவே சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்.

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.ஆனால், எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே எலியைக் கொல்வது என முடிவு செய்து, ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.ஆனால் வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீது பாய்ந்து தாக்கியது.அதில் அவனும் காயம் அடைந்தான்.‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா?’ என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்,
"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது.அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்’’ என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.பூனையும் உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது. பூனை இருப்பதை அறிந்த எலி,தயங்கித் தயங்கி வெளியே வந்தது.கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது.மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.ஆனால், இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.
மறுநாள் வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,
"எப்படி முரட்டுஎலியைக் கொன்றாய்? இதில் என்ன சூட்சுமம்?’’எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.நான் பொறுமையாக காத்திருந்தேன்.நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது. ஆகவே,அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டுதான்இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,
‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.என் நகங்கள் கூட கூர்மையானவை.ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது.எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.ஆகவே ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும் அமைதியாகவே இருப்பான்.உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்.ஆனால் தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதைபொருந்தக்கூடியதே.மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.ஆனால்,அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.

*காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.*

*வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.*

#நம் பலம் மட்டும் நம் பலமில்லை,

*நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான்.*