திங்கள், 24 ஏப்ரல், 2023

தந்தை மகன்

 இந்த கதையை படியுங்கள்.... எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் . 


சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.


அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. 


மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.


சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.


‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம்  காத்தேன் என்றார். இறைவனும் இப்படித்தான்.

சாக்ரடீஸ்

 படித்ததில்  பிடித்தது


மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?  தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன விளக்கம்.


ஒரு மாணவன் சாக்ரடீஸிடம் வந்தான்.


“ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?’’ என்று கேட்டான்.


அதற்கு சாக்ரடீஸ், “மாணவன் என்பவன், கொக்கைப் போல இருக்க வேண்டும்.  கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும்.  உன்னைப் போல இருக்க வேண்டும்” என்றார்.


மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை.


“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றான்.


“கொக்கு, ஒற்றைக் காலில் நீண்ட நேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்து விடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.


“கோழியைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டான் மாணவன்.


“கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.


“அடுத்தது, உப்பைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே…’’


“ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.


அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர் தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.


“எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டான்.


“மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத் தான் உன்னைப் போல இருக்க வேண்டும் என சொன்னேன்’’ என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

Break ப்ரேக்

 பிரேக்_எதற்கு???


ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டார்


“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”


பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.


நிறுத்துவதற்கு"


“வேகத்தைக் குறைப்பதற்கு"


“மோதலைத் தவிர்ப்பதற்கு "


"மெதுவாக செல்வதற்கு"


"சராசரி வேகத்தில் செல்வதற்கு"


என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.


“வேகமாக ஓட்டுவதற்கு" என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.


அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.


ஆம்... பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.


உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.


பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.


இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம்.


தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.

உண்மையில் அவைதான்

நம்மை மேம்படுத்தும்.


இந்த கொரானா சூழ்நிலையும் ஒரு வேகத்தடைதான், இதை நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால் , பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்.


(படித்ததில் பிடித்தது)

புத்தகங்கள்

 என்னைப் பார்க்க வருபவர்களில் புத்தகம் கொண்டு வருபவர்களே நல்ல நண்பர்கள் என்றார் ஆப்ரஹாம் லிங்கன்..


ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை என்றுரைத்த சிசரோ மாபெரும் சிந்தனையாளர்..


பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது " புத்தகங்கள் தான் " என்றாராம் மார்ட்டின் லூதர் கிங்...


தனது நீண்ட பயணத்தின்(long  march) போது  மாசேதுங் எழுதிய நூல்கள் ஏராளம்...


தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது "புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்" என்றார் நேரு... 


ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பதை பல  அறிஞர்கள் நினைவு கூர்கிறார்கள்...


தன் சிறுநீரகமும் கண்களும் பழுதுபட்ட நிலையிலும் தன் மரணம் வரை உருபெருக்கி கண்ணாடி துணையோடு புத்தகங்கள் படித்து வந்த  பெரியார், பெண் விடுதலைக்கு வழி என்ன என்று கேட்டபோது , அவர்கள் கைகளிலுள்ள கரண்டிகளை பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுங்கள் என்றார்....  


உலகையே மாற்றியமைத்த கார்ல் மார்க்ஸ், காதல் மனைவி ஜென்னிக்கு இணையாக புத்தகங்களோடு வாழ்ந்தவர்...


லண்டன் நூலகத்தில் அம்பேத்கரின் கரங்கள் படாத நூலேதுமில்லை..


நெப்போலியன் போனபார்ட் யுத்தங்களுக்கு செல்லும் போது கூட இன்னொரு குதிரையில் புத்தகங்களும் பயணிக்கும்...


போலந்தில் தலைமறைவாக இருந்த காலத்தில் கூட வெட்டப்பட்ட மரத்தூரின் மீது அமர்ந்து கொசுக்கடிகளுக்கிடையே  புத்தகங்கள் வாசித்தவர் லெனின்...


தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் போது கூட லெனின் எழுதிய "அரசும் புரட்சியும்" படித்துக் கொண்டிருந்தவன் பகத்சிங்...


அறிஞர் அண்ணாவிற்கு கன்னிமாரா நூலகம் வசிப்பிடங்களில் ஒன்றாக மாறியிருந்தது...   


பள்ளி இறுதி கூட தாண்டாத கலைஞரையும் நூல்களையும் பிரித்துப் பார்க்க முடியாது..மிகக் கடும் பணிச்சுமைகளுக்கிடையே அவர் எழுத்துக்களை பார்க்கும் போது அவருடைய படிப்பின் ஆழம் புரியும்...அவரின் பேனா அவரின் ஆறாம் விரலாக இருந்தது என்றே சொல்லலாம்...


இந்தியாவில் பொதுவுடைமைக்கு விஞ்ஞான வெளிச்சம் தந்த ராகுல சாங்கிருத்யாயன் அரிய நூல்களை ஹசாரிபாக் சிறைச் சாலையில்தான் படைத்தார்...


புத்தகங்கள், கடந்த கால வரலாறு, தற்போதைய நிகழ்வுகள் ஆகியவற்றைச் சொல்வதுடன் அதை ஆழ்ந்து உட்கிரகிப்பவர்களுக்கு எதிர்காலத்தை முன்னறிவுக்கும் தீர்க்க தரிசிகளாக இருக்கின்றன...


மனித குல விடுதலைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் சிறைச்சாலைகளில் நூல்களைப் படிக்கிறார்கள்...பயணங்களில் வாசிக்கிறார்கள்...


புத்தகங்கள் படிக்கவோ படைக்கவோ நேரம் இல்லை என்பது ஒரு மேற்பூச்சான காரணம் தான்.. 


மின்சார விளக்குகளால் எவ்வளவு ஒளியூட்டப்பட்டாலும் புத்தகங்கள் இல்லாத வீடு இருள் படிந்த வீடே...


வாசிப்போம்...நிறைய....

நிறைய....


ஷேக்ஸ்பியரின் நினைவு நாள் இன்று...... 


இன்று உலக  புத்தக தினம்....


#ஏப்ரல்23.

சனி, 15 ஏப்ரல், 2023

பெரியாரும் ராஜாஜியும்

 

*கடவுள் நம்பிக்கை கொண்ட ராஜாஜியும், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரும் 94 வயது வரை வாழ்ந்தார்கள்.*

*இருவருமே சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.*

*பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் கொண்டாடப்படுகிறார்.*காரணம் ராஜாஜியின் செயல்பாடுகள் என்பது அவரது சமுதாயத்தினருக்கு உகந்ததாக மட்டுமே இருந்தது.*

*ஆனால் பெரியாரின் சிந்தனை, பேச்சு, செயல் என அனைத்தும் ஒட்டுமொத்த சமுதாயத்தினருக்கும், அவர்களின் சந்ததிகளுக்கான முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே இருந்தது.*

*ராஜாஜி அரசியல்வாதி. தனக்கும் தனது சமுதாயத்திற்கும் எது பலன் தரும் என்று மட்டுமே சிந்தித்தார்.*

*ஆனால் பெரியார் சமூக சீர்திருத்தவாதி. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் எது பலன் தரும் என்று சிந்தித்து அதன்படி செயல்பட்டார்.*

*ராஜாஜி தன் சமகாலத்தினராலேயே மறக்கப்பட்டப்தற்கும்,*
*ஆனால் ராஜாஜியின் ஆதரவாளர்கள் ஏன் அவரை கொண்டாட  மறந்து போனார்கள்..?*
*பெரியார் மூன்று தலைமுறைகளை தாண்டி இன்றும் கொண்டாடப்படுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.*

*எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல... அவன் யாருக்காக? எப்படி? வாழ்ந்தான் என்பதே முக்கியம்...*