திமுகவை கலைஞர் எப்படி அமைப்பு ரீதியாக கட்டிக் காப்பாற்றினார், எப்படி ஒவ்வொரு நிர்வாகிக்கும் ஒரு வரையறை வகுக்கப்பட்டது, அந்த வரையறையின் படி எப்படி கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டது, எப்படி ஒரு நோட்டீஸ் கூட புரோட்டோகால்படி அடிக்கப்பட்டது. என்பதற்கு ஏராள உதாரணங்கள் உண்டு. அமைச்சர் ஆகவே இருந்தாலும், அந்த மாவட்ட செயலாளர் இடம் தெரிவிக்காமல் வேறு மாவட்டத்திற்குள் செல்ல முடியாது. பொதுச்செயலாளராக இருந்தாலும் மாவட்ட, ஒன்றிய செயலாளர்களிடம் தகவல் தெரிவித்தே ஆக வேண்டும்.
கலைஞர் 96-01 ஆட்சியில் நடந்த ஒரு சம்பவம். புதுக்கோட்டையில் ஒரு அரசு விழாவிற்கு வருகிறார் கலைஞர். அப்போது புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு அவர்கள்.
விழா நடைபெறும் இடத்தில் இருக்கும் கிளைச் செயலாளருக்கும் அந்த பகுதி ஒன்றிய செயலாளருக்கும் பனிப்போர். ஒன்றிய செயலாளர், இந்த நிகழ்ச்சி குறித்து கூட்டிய கூட்டங்களிலும் கிளைச் செயலாளர் அழைக்கவில்லை, மேலும் இந்த விழா சம்பந்தமாக அடிக்கப்பட்ட வரவேற்பு போஸ்டர்கள், நோட்டீஸ்களில் கிளைச் செயலாளர் பெயரை வேண்டும் என்றே தவிர்த்து விட்டார் ஒன்றிய செயலாளர்.
வேலை அழுத்தத்தில், அப்போதுதான் புதிதாக பதவிக்கு வந்திருந்த பெரியண்ணன் அரசு அவர்கள் இந்த விஷயத்தை கவனிக்கவில்லை. விழா நாளும் வந்தது. மாலை 6 மணிக்கு விழா.
மதியம் போல் வந்த கலைஞரிடம், கிளைச் செயலாளர், எனக்கு, நீங்கள் வருவதை யாரும் சொல்லவில்லை. நோட்டீசிலும் பேர் போடவில்லை. எனவே என்னுடைய கிளையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு நீங்கள் வரக்கூடாது என்று ஒரு கடிதத்தில் எழுதி கொடுத்துவிட்டு போய்விட்டார்.
கலைஞர் அதைப் படித்தவுடன், மாவட்ட செயலாளரை அழைத்து, அவருடைய கிளை. அவர் அழைக்காமல் தான் அங்கே வர முடியாது. எப்படியாவது அவரை கூட்டி வந்து என்னை அழைக்கச் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
விழாவிற்கான நேரம் நெருங்குகிறது. எல்லோரும் நாலா பக்கமும் தேடுகிறார்கள். கிளைச் செயலாளர் அவருக்கு தெரிந்த ஒரு கடையில் போய் பதுங்கிக் கொண்டார். அந்த கடைக்காரரும் கழகத்தவர் தான். அவருக்கு ஏதோ சரி இல்லை என தட்டுப்பட, என்ன விஷயம் என கேட்டு, அவரை கையோடு மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விட்டார்.
மாவட்டச் செயலாளர் அவரிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அவரை அழைத்துக் கொண்டு வந்து கலைஞரை பார்த்தார்.
என்னையா இப்ப வரலாமா என கலைஞர் கேட்க? வாங்க தலைவரே என சொல்லவும் தான், கலைஞர் அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கிளம்பினார்.
அந்த அளவிற்கு கட்சி பதவிகள் பைலா படி கொடுப்பது, கட்சி தேர்தல்கள் நடத்துவது, எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதை ஆவணப் படுத்துவது, அந்த விதிகளை மீறாமல் நடந்து கொள்வது என கலைஞர் போட்டு வைத்த பாதை சிறப்பானது.