கூச்சம் தவிர்!
http://www.puthiyathalaimurai.com/this-week/3186
‘பரதேசி’ படத்தின் கேமராமேன் என்றதுமே எல்லாருக்கும் உடனே பளிச்சென்று தெரியும். ஆனால், செழியன் ஒரு சகலகலா வல்லவர். உலக சினிமா குறித்து அவர் எழுதிய புத்தகங்கள் சினிமா ஆர்வலர்களிடையே வெகுபிரசித்தம். ‘ஹார்மோனியம்’ என்கிற அவரது சிறுகதை, தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. இந்தக் கதைக்காக, ‘கதா’ விருது பெற்றவர் செழியன்.
இந்திய கலாச்சார அமைச்சகத்தின் நிதியுதவி பெற்று, தமிழ் சிறுகதைகள் வெளிப்படுத்தும் மனச்சித்திரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டவர். டாக்டர். அப்துல் கலாம் குறித்து, ‘ஒரு சிறிய கனவு’ என்று ஆவணப்படம் எடுத்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த இவரது ஆவணப்படமும் புகழ்பெற்றது.
சினிமா, எழுத்து மட்டுமின்றி இசைத்துறையிலும் தடம் பதித்திருக்கிறார். ஓர் இசைப்பள்ளி நடத்துகிறார். மேற்கத்திய இசை குறித்த அறிமுகத்தைத் தரும் பத்து பாகங்கள் கொண்ட தொடர்நூலை தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
பல்துறை வித்தகரான செழியன், தன்னுடைய வாழ்க்கைப் பயண அனுபவங்கள் சிலவற்றையும் அவற்றின் மூலம் கிடைத்த படிப்பினைகளையும், ‘புதிய தலைமுறை’ வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்
அப்போது முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் தினத்திற்காக நான் படித்த நாட்டரசன் கோட்டை விசாலாட்சி வித்யாசாலா தொடக்கப் பள்ளியில் ஓர் ஓவியப்போட்டி நடந்தது. போட்டியில் நேருவின் படத்தை வரைய வேண்டும்.
எனது அப்பாவும் அம்மாவும் அதே பள்ளியில் ஆசிரியர்கள். அப்பா ஓவியப் பயிற்சி பெற்றவர். இரண்டு நாட்களுக்கு முன்பே ஒரு காகிதத்தில் நேருவின் பக்கவாட்டு முகத்தை கோட்டோவியமாக வரைந்து கொடுத்தார். அதைப் பார்த்து பழகச் சொன்னார்.
சரிவான தொப்பி. அதிலிருந்து நேர்கோடாக நெற்றி. நீளமான மூக்கு. இதுவரை வரைவது எனக்கு எளிதாக இருந்தது. மூக்குக்குக் கீழே வாயையும், நாடியையும் வரைவதில் ஒரு கோணல் இருந்து கொண்டே இருந்தது. நாடியின் நீளம் கொஞ்சம் கூடினாலும் அது நேருவாக இல்லை.
அதுவரை தேர்வுகளிலும் போட்டிகளிலும் முதல் பரிசு தவிர வேறு பரிசுகள் வாங்கியதே இல்லை என்பதால், ஓவியப் போட்டியிலும் நானே முதல் பரிசு என்று நினைத்துக்கொண்டு வரைந்தேன். முடிவுகள் வந்தன. நான் இரண்டாம் பரிசு. முதல்முறையாக முதலிடம் இழந்ததை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
பள்ளி முடிந்து வந்து வீட்டுக்குள் போகாமல், வெளியில் நின்று சுவரை நகத்தால் கீறிக்கொண்டு இருந்தேன். அம்மா அருகே வந்தார். நான் இரண்டாம் பரிசு வாங்கியதில் அம்மாவுக்கும் வருத்தம்தான்.
‘ஒரு தடவை வரைஞ்சா வந்திருமா?’ என்றார்.
அமைதியாக இருந்தேன்.
‘நீ வரைஞ்சு வரைஞ்சு நல்லா பழகியிருக்கணும்... தப்பு உம்மேலதான்...’
‘நான் இப்ப திரும்ப வரையுறேன்...’
‘இனி அடுத்த வருஷம்தான்...’ சொல்லிவிட்டு அம்மா வேகமாக உள்ளே போய்விட்டார்.
எனக்கு அழுகையாக வந்தது. அம்மா எனக்கு ஆறுதல் சொல்வார் என எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. நடந்ததை மாற்ற முடியாது என்கிற உண்மையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மேலும் அந்தப் போட்டிக்கு அப்பாதான் நடுவர் என்பதும் என் ஏமாற்றத்துக்கு கூடுதல் காரணம்.
அன்று இரவு வரை யாரிடமும் பேசவில்லை. பிறகு அம்மாவே ஆறுதலாகப் பேசினார்.
‘செழி... உனக்குத் தெரியலைன்னா பரவாயில்ல. தெரிஞ்ச படத்தை ஒழுங்கா வரைய வேணாமா? செய்யறதைத் திருந்தச் செய்யணும்ப்பா..."
திருந்தச் செய்யணும் என்பதன் அர்த்தம் முதல்முறையாக எனக்குப் புரிந்தது.
எங்கள் பள்ளி ஓட்டுக் கட்டிடம் என்பதால், நீளமான வகுப்பறைகளின் மேல் வரிசையாக பனைமர உத்தரங்கள் இருக்கும். அதில் கலர் சாக்பீஸால் மேற்கோள்கள் எழுதி இருப்பார்கள். ‘அறம் செய்ய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ ‘இயல்வது கரவேல்’ என்று வரிசையாக உத்தரத்தின் இரண்டு பக்கமும் எழுதி இருக்கும். பெரும்பாலும் அப்பாதான் இதை எழுதுவார். அந்த உத்தரத்தில், ‘செய்வன திருந்தச் செய்’ என்றும் எழுதி இருந்ததைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.
ஆனால், அதன் அர்த்தம் வெற்றிவாய்ப்பை இழந்தபோதுதான் பளிச்சென்று புரிந்தது.
இப்போதும் நான் செய்கிற எந்த வேலை, அதற்குரிய விளைவைத் தராமல் போகும்போது அம்மா சொன்ன இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும்.
1. தப்பு உம்மேலதான்
2. செய்யறதை திருந்தச் செய்
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அப்பாதான் என் வகுப்பு ஆசிரியர். வீட்டிலிருந்து பள்ளி வரை அப்பாவும் நானும்தான் பேசிக்கொண்டே நடந்து வருவோம்.வெளியில் இருக்கும்வரை அவர் அப்பா. பள்ளிக்குள் நுழைந்துவிட்டால் சார். மிகவும் கண்டிப்பான ஆசிரியர். மூணாப்பு சார் என்றால் எல்லோருக்கும் பயம்.
வகுப்பு நேரம் முடிந்து, மாலையில் விளையாட்டு வகுப்பு நடக்கும். பள்ளிக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் சக மாணவர்கள் கபடி விளையாடும்போது நானும் அதில் கலந்துகொள்வேன். ஆனால், ஒருமுறை கூட பாடிப்போக மாட்டேன். பாடிப்போவது என்பது கபடி கபடி என்று பாடிக்கொண்டே எதிர் அணியில் இருப்பவர்ளை தொட்டு, அவுட் ஆக்க வேண்டும். இவ்வாறு பாடிப்போகும்போது எதிரணிக்காரர்கள் நம்மைப் பிடித்து அமுக்கி அவுட் செய்யும் அபாயம் இருப்பதால், அதற்குப் பயந்துகொண்டே பாடிப்போக மாட்டேன். மூணாப்பு சார் மகன் என்பதால், என்னை யாரும் வற்புறுத்தவும் மாட்டார்கள்.
நாங்கள் விளையாடும்போது அப்பா ஓர் ஆசிரியராக நின்று பார்த்துக் கொண்டிருப்பார். ஒருநாள் நான் பாடிப்போகாமல் இருப்பதைக் கவனித்துவிட்டார். சில மாணவர்களை அழைத்துக் கேட்டார்.
‘ஆம் சார்...செழியன் எப்பவுமே பாடி வரமாட்டான் சார்!’
ஆட்டம் புதிதாகத் துவங்கியது.
‘நீதான் முதல்ல பாடிப் போகணும் போ..’ என்றார் அப்பா.
நான் தயங்கி நின்றேன். மாணவர்களுக்கு சிரிப்பு. எனக்கு வெட்கமாகவும் பயமாகவும் இருக்கிறது.
வேண்டாமே என்பது போல அப்பாவைப் பார்க்கிறேன். ஆனால், அவர் மூணாப்பு சாராக கோபத்துடன் நின்று, ‘போ...’ என்று கத்துகிறார். நான் போகாமல் நின்றுகொண்டு இருந்தேன். வேகமாக அருகில் வந்தவர், தலையில் ஓங்கிக் கொட்டினார்.
‘க...ப...டி... க...ப...டி...’ பாடிப்போனதுமே மாணவர்கள் சிரித்துக்கொண்டே என்னைப் பிடித்து அமுக்கி அவுட் ஆக்கிவிட்டார்கள். அவமானம் தாங்க முடியவில்லை. அழுகையும் கோபமும் பொங்குகிறது. அவுட் ஆகி, கோட்டுக்கு வெளியில் தலைகுனிந்து நிற்கிறேன். எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. அன்று மாலை வீட்டுக்கு அப்பாவுடன் வரவில்லை. தனியாகவே நடந்து வந்து விட்டேன்.
என்னதான் கோபம் என்றாலும் தூங்கும்போது அப்பா அருகில் படுத்துதான் தூங்க வேண்டும். அன்று அம்மா பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டேன். ‘நீ அவர்கூட பேசாத...’ என்று அம்மா சொல்லும்போது, ‘செழி... இங்கிட்டு வா...’ தோளைப்பிடித்து அப்பா திருப்பினார். நான் திரும்பாமல் இருந்தேன். என் தலையைத் தடவிக் கொடுத்து, ‘வலிக்குதா?’ என்று கேட்டதும் அழுகை பொங்கிவிட்டது. நெருக்கமாக படுக்க வைத்துக் கொண்டார். தேம்பித் தேம்பி அழுது ஓய்ந்தேன்.
‘செழி... எதுக்குப்பா பயப்படுற... எல்லாரும் உன்னை மாதிரி சின்னப் பயலுகதானே...’
எங்கள் எஸ்.வி.வி. சாலா தொடக்கப்பள்ளிக்கு ஊரின் இன்னொரு தெருவில் ஒரு கிளை இருந்தது. மெயின், பிராஞ்ச் என்று இரண்டு பள்ளிகளையும் சொல்லுவோம். அம்மா பிரதானப் பள்ளியில். அப்பா கிளைப் பள்ளியில். அப்போது ஸ்கூல் லீடர் தேர்ந்தெடுக்கும் முறை வந்தது. ஒரு மாணவரை பிரதானப் பள்ளியில் இருந்தும் இன்னொருவரை கிளைப் பள்ளியில் இருந்தும் முன்மொழிவார்கள். இவ்வாறு மொழியப்பட்ட மாணவர்கள் இருவரும் ஒவ்வொரு வகுப்புக்கும் போய், முன்னால் நின்று என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று வாக்கு கேட்க வேண்டும். விரும்பியவர்கள் கை தூக்குவார்கள். அதில் யாருக்கு அதிகமாக கை தூக்கப்படுகிறதோ அவர்தான் மாணவர் தலைவர்.
கிளைப் பள்ளியில் இருந்து அப்பா என்னை முன்மொழிந்தார். எனது கூச்சத்தைப் போக்கும் ஏற்பாடுதான் இது.
‘மெயின் ஸ்கூலுக்குப் போ... போ, ஒவ்வொரு வகுப்பாகக் கேளு..."
நான் அம்மா இருக்கும் வகுப்புக்கு முதலில் போய் அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு முன்னால் நின்றேன். அதுவே ஒருமாதிரி கூச்சமாக இருந்தது. இன்னொரு வகுப்புக்குப் போனேன். மற்ற வகுப்புகள் போய் ஒன்றும் சொல்லாமல் நின்றேன். முடிவில் எனக்குப் போட்டியாக நின்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நான் தோற்றுப்போனேன். அன்றும் தோல்வியை என்னால் தாங்க முடியவில்லை. அப்பாவிடம் வந்து எப்படிச் சொல்வது? அவரைப் பார்த்ததுமே அழுகை வந்துவிட்டது. வழக்கம்போலவே என் அழுகைக்கு அவர் ஆறுதல் சொல்லவில்லை. இது நடக்கும் என்பது அவருக்குத் தெரிந்தே இதைச் செய்தது போல இருந்தது.
அந்த சமயத்தில் இந்திரா காந்தியின் இருபது அம்சத் திட்டம் வந்திருந்தது. அதற்காக பேச்சுப் போட்டிகள் நடந்தன. போட்டியில் என் பெயரை அப்பா கொடுத்தார். அவரே பேசுவதற்குப் பயிற்சியும் கொடுத்தார்.
‘கூட்டத்தைப் பார்த்து பயப்படக்கூடாது. அதற்குப் பழக வேண்டுமெனில், இதைப் பார்த்துப் பேசு"என்று கண்ணாடி முன்னால் நிறுத்தினார். அந்தப் பேச்சில் பாரதியார் பாடலும் இருந்தது.
’அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே’
அதை எப்படி உச்சரிக்க வேண்டும், எந்தச் சொல்லை அழுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார். அச்சம் என்பதுதான் பயம் என்று சொன்னார். இதை எழுதிய பாரதியைப் பற்றிச் சோன்னார். ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிற எம்ஜியார் பாடலையும் பாடிக்காட்டினார்.
பேச்சுப் போட்டி வந்தது. உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் நான் மிகவும் சிறுவனாக இருந்ததால், மேஜையின் மீது என்னை ஏற்றி நிற்க வைத்தார்கள். பள்ளியின் எதிரில் ஒரு குளம் இருக்கும். நல்ல வேளையாக மேஜையின் மீது ஏறி நின்றதும் எதிரில் இருந்த யார் முகமும் தெரியவில்லை. குளம்தான் தெரிந்தது. அந்தக் குளத்தைப் பார்த்து கைகளை அசைத்துப் பேசி முடித்தேன். கைதட்டல்களும் பாராட்டுக்களும் குவிந்தன.
‘இதையே ஆல் இந்தியா ரேடியோவில் பேச முடியுமா?’ என்று தலைமை ஆசிரியர் கேட்டார். எனக்குப் பெருமிதமாக இருந்தது.
‘அப்பா! அன்னிக்கு லீடர் தேர்ந்தெடுக்கும்போது யாருமே எனக்கு கை தூக்கல. இன்னிக்கு எல்லோரும் கை தட்டுறாங்களே...ஏன்?’
‘பயப்படாம நாம ஒரு விஷயத்தைச் செய்யும்போது அதை எல்லாரும் பாராட்டுவாங்க.’
‘பேசுறதுக்கு முதல்ல பயமாத்தான் இருந்துச்சு...அப்புறம் எப்படிப் போச்சு?’
‘தெனம் பயிற்சி எடுத்தீல்ல... அதுதான், பயிற்சி எடுத்தா எதையும் பழகீறலாம். முடியாததுன்னு எதுவும் இல்ல.செய்யறவரைக்கும்தான் பயம். செஞ்சேன்னு வெச்சுக்க... அது போயிரும்.’
மனதுக்குள் இன்னொரு கதவு திறந்தது.
சென்னைக்கு வந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். முதல் நாள் படப்பிடிப்பு ஒரு வீட்டில் நடந்தது. மதிய இடைவேளையின் போது பி.சி.சார் என்னை அழைத்தார்.
‘செழியன்...பர்ஸ்ட் ஃப்ளோருக்குப் போ ஒரு அஞ்சு பேர் நிக்கிற மாதிரி வைட் ஃப்ரேம் வெச்சுட்டு என்னைக் கூப்பிடுங்க’ என்றார்.
எனக்கு ஆச்சரியம். படப்பிடிப்பின் முதல் நாள். எங்கள் குழுவில் நான் கடைசி உதவியாளன். என்னை அழைத்து ஃப்ரேம் வைக்கச் சொல்கிறார் என்றதும் ஆர்வமாக முதல்தளத்துக்குப் போனேன். போன உடனே இது எனக்கு வைக்கப்படுகிற தேர்வு என்று புரிந்துவிட்டது. அது மிகச்சிறிய அறை. அந்த அறையில் கேமரா வைத்தால், எதிரில் இரண்டு பேருக்கு மேல் நிற்க முடியாது. இதில் வைட் பிரேம் எப்படி வைப்பது? வைக்க முடியல சார் என்று சொல்வது எளிது. ஆனால், முதன் முதல் கொடுத்த ஒரு வாய்ப்பை முடியவில்லை என்று சொல்வது புத்திசாலித்தனம் ஆகுமா?
யோசித்துக்கொண்டே நின்றேன். அந்த அறையைச் சுற்றிலும் பார்த்தேன். பூட்டிய கதவு ஒன்று இருந்தது. அந்தக் கதவைத் திறக்க முடிந்தால், உள்ளே கேமராவை வைத்துவிடலாம். அந்த வீட்டு உரிமையாளரைப் பார்த்துக் கேட்டேன். அவர், ‘திறக்க முடியாது... அது பெர்சனல் அறை’ என்று மறுத்துவிட்டார். தயவுடன் வேண்டிக் கேட்டுக்கொண்டதும் கதவைத் திறக்க ஒப்புக் கொண்டார். கேமராவை உடனே உள்ளே வைத்து ஒரு வைட் பிரேம் வைத்துப் பார்த்தேன். சரியாக இருந்தது.வேகமாக வந்து பி.சி. சாரிடம் சொன்னேன். முதுகில் தட்டிக் கொடுத்தார்.
அவ்வளவுதான். அந்த ஷாட்டை அவர் எடுக்கவில்லை. ஆனால், அன்று நடந்தது எனக்கு ஒரு தேர்வு. அந்த நொடியிலிருந்து கேமரா மீது எனக்கு இருந்த பயம் போய்விட்டது. இந்தக் கருவியை நம்மால் கையாள முடியும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. ‘செய்யற வரைக்கும்தான் பயம், செஞ்சா அது போயிரும்...’ என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.
சிறுவயதில் மேஜையின் மீது என்னை ஏற்றி நிற்க வைத்ததுப் பேசு என்றதும் முதல் நாளே கேமராவைக் கையாள அனுமதித்ததும் ஒரே நோக்கத்தின் இரண்டு விதமான செயல்கள் என்பதைப் புரிந்து கொள்கிறேன். ஒன்றை அப்பா செய்தார். இன்னொன்றை ஆசிரியர் செய்தார்.
‘வருவதை எதிர்கொள்’ என்கிற கீதையின் மேற்கோள் எனக்கு மிகவும் பிடிக்கும். வருவதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதை திருந்தச் செய்யவேண்டும். வெற்றி என்பதும் தோல்வி என்பதும் ஒரு செயலை நாம் எப்படிச் செய்கிறோம் என்பதன் இரண்டு வெவ்வேறு விளைவுகள். அவ்வளவுதான்.
திரைப்பட வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன. வெற்றியாக இருந்தால், அதற்குப் பலர் காரணமாக இருக்கலாம். ஆனால், தோல்வியாக இருந்தால், ‘தப்பு உன்மேலதான்... செய்யறதை திருந்தச் செய்’என்கிற அம்மாவின் குரல்தான் இப்போதும் எனக்குக் கேட்கிறது.
இதுபோல வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பூட்டிய கதவுகள் சுற்றிலும் இருக்கின்றன. கொஞ்சம் தேட வேண்டும். இப்போதும் என் வாழ்க்கையில் வெற்றியடைந்த தருணங்கள் எல்லாம் என்னால் முடியும் என்று துணிந்து செய்யும்போதுதான் கிடைத்திருக்கின்றன. தோல்விகள் வரும்போது அதற்கு நான்தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்கிறேன். செய்வதை முன்பைவிடத் திருந்தச் செய்கிறேன். வெற்றி வருகிறது.
வருவதை எதிர்கொள், கடமையைச்செய், பலனை எதிர்பாராதே...
சந்திப்பு : யுவகிருஷ்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக