வியாழன், 13 செப்டம்பர், 2018

மனிதனை நேசி கடவுள் உன்னை நேசிப்பார்

ஒரு ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தன்னால் இயன்ற நல்ல பல பணிகளை மக்களுக்கு செய்து வந்தார்.

அவர் கோயிலுக்குச் செல்வதோ, கடவுள்களைக் கும்பிடவோ நினைக்காதவர்!

மக்களுக்குச் செய்யும் பணியே மகத்தானது என்ற மாண்புடன் வாழ்பவர்!

ஒரு நாள் சாலையில் வித்தியாசமான தோற்றத்தில் ஒரு உருவத்தைச் சந்திக்கிறார்.

அருகே சென்று, "நீங்கள் யார்?"  என்று கேட்கிறார்.
அதற்கு அந்த உருவம்,
"நான், அபு என்னும் ஒரு தேவதை! கடவுளை அதிகமாக நேசிக்கும், வணங்கும் மனிதர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டிருக்கிறேன்!" என்று கூறுகிறது.

இந்த மனிதர் ஆச்சரியப்பட்டு, "அதில் என் பெயர் இருக்கிறதா?"என்று கேட்கிறார்.

அதற்கு அந்தத் தேவதை, 
"இல்லை" என்று சொல்கிறது.

இந்த மனிதர், தன் பாட்டுக்குச் சென்று விடுகிறார். மீண்டும் தனது மக்களுக்கான பணிகளைச் செய்து வருகிறார்.

சிறிது காலம் செல்கிறது. மீண்டும் அதே உருவத்தைச் சந்திக்கிறார்.

அதனிடம் சென்று,
"இப்போது என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்கிறார்.

தேவதை சொல்கிறது.
"கடவுள் அதிகமாக விரும்பும் மனிதர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்று.

இவர் கேட்கிறார்.
"இதில் என்னுடைய பெயர் இருக்கிறதா?"
என்று.

தேவதை சொல்கிறது.
"உங்கள் பெயர் தான் முதலில் இருக்கிறது!"

இது தான் உண்மை!

கடவுள், தேவதை என்பதெல்லாம், ஒரு புறம் இருந்தாலும், ஒரு நல்ல நீதிக்காக மட்டுமே, இந்தத் துணுக்கு!

சக  மனிதனையே சாதி, மத ரீதியாக பிரித்து ஆண்டு கொண்டிருக்கும், இந்த உலகில் மனிதனை மட்டுமே நினைத்துச் சேவை செய்யும் மனிதர்கள் தானய்யா, போற்றப் பட வேண்டியவர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக